
முதிர்ச்சியற்றவர் என ராகுல் மீது பழிபோட்டுவிட்டு காங்கிரசுக்கு முழுக்குப்போட்டுவிட்டார் குலாம் நபி ஆசாத். இது காங்கிரஸ் தலைமை முன்னமே கணித்ததுதான் என்றாலும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் குலாம் நபியின் வெளியேற்றம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், குலாம் நபியை வைத்து காஷ்மீரில் தனது டிரேட் மார்க் திருவிளையாடலை அரங்கேற்றத் தயாராகி வருகிறது பாஜக. சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தால் ஜம்முவை பாஜக கைப்பற்றும் என்பதே இப்போதைய சூழல். ஆனால், காஷ்மீரில் அவர்களுக்கு அது அத்தனை எளிதாக இருக்காது. அதற்காகவே குலாம் நபியை காங்கிரசைவிட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறதாம் பாஜக. அங்குள்ள மாநிலக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேர அவ்வளவு எளிதில் முன்வரமாட்டார்கள். எனவே, குலாம் நபியை புதிதாக ஒரு கட்சியை தொடங்கவைத்து அந்தக் கட்சிக்குத் தேவையான மறைமுகமான உதவிகளைச் செய்வது பாஜகவின் திட்டம் என்கிறார்கள். காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் ஆதரவு ஓட்டுகளையும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளையும் குலாம் நபியால் உருவாக்கப்படும் கூட்டணியை வைத்து சிதறடித்துவிட்டால் தங்களால் அங்கேயும் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என்பதே பாஜகவின் கணக்கு என்கிறார்கள். அந்தக் கணக்கை குலாம் நபியை வைத்து கச்சிதமாக முடிக்க காய்நகர்த்துகிறது பாஜக. இந்தத் திட்டங்கள் எல்லாம் பாஜகவின் இலக்கை நோக்கி நகர ஆரம்பித்த பிறகே காஷ்மீருக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.