மீண்டும் ஓபிஎஸ் பக்கம் வருகிறாரா கே.பி.முனுசாமி?

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

ஒற்றைத் தலைமைப் பிரச்சினையால் கிடைத்த சந்தில் புகுந்து ஈபிஎஸ் அணியின் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் வந்து உட்கார்ந்தவர் கே.பி.முனுசாமி. அப்படிப்பட்டவர் அதிமுக பொதுக்குழுவுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்தது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

முன்பு, தர்மயுத்தம் பார்ட் 1-ல் ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாக நின்ற முனுசாமி, பார்ட் 2-வில் ஈபிஎஸ் பக்கம் தாவிவிட்டார். அதற்கு பிரதியுபகாரமாகவே அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார் ஈபிஎஸ். ஆனால், பேருக்கு பதவியைக் கொடுத்துவிட்டு எந்த முடிவாக இருந்தாலும் தனக்கே தெரியாமல் எடுக்கிறார்கள் என முனுசாமிக்கு வருத்தமாம். அத்துடன், தன்னைவிட தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் சொல்வதைத்தான் ஈபிஎஸ் கேட்கிறார். அவர்கள் தான் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் என வெளிப்படையாகவே புலம்பிவந்தாராம் முனுசாமி.

இந்தச்சூழலில், அண்மையில் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் முனுசாமியை அழைக்காமல் சி.வி.சண்முகத் தையும் வேலுமணியையும் அழைத்துச் சென்றார் ஈபிஎஸ். ஏற்கெனவே பொதுக்குழு மேடையிலேயே முனுசாமிக்கும் சி.வி.சண்முகத்துக்கும் வாக்குவாதம் முற்றியது. அதையும் ஈபிஎஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம். இதையெல்லாம் மனதில்வைத்தே, தனது கெத்தைக் காட்டுவதற்காக நேற்றைய கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிட்டாராம் முனுசாமி. தலைமையிலிருந்து கேட்டவர்களுக்கு, “உடம்புக்கு சுகமில்லை; அதனால் வரமுடியாமப் போச்சு” என்று சொன்னாராம். இதனிடையே, மீண்டும் முனுசாமி ஓபிஎஸ் பக்கம் தாவப்போகிறார் என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்திகளை தட்டிவிட, “இவரு எந்த இடத்திலும் நம்பிக்கையா இருக்கமாட்டாரு... ஐயா ஓபிஎஸ் இவரைக் கண்டுக்காம இருக்கிறதே நல்லது” என்று சிலர் அந்தச் செய்திக்கு பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in