மத்தியஸ்தநாதரிடம் மனு போட்டிருக்கும் கார்த்தி!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வருவதற்கு எனக்கும் விருப்பம் இருக்கிறது” என்று மைக் சிக்கிய இடமெல்லாம் மனம் திறந்து பேசிவருகிறார் கார்த்தி சிதம்பரம். அந்த எண்ணம் ஈடேறவேண்டும் என்பதற்காக கோயில் காரியங்களிலும் இப்போது தனி கரிசனம் காட்டிவருகிறார். தென்காசி மாவட்டம் தாருகாபுரத்தில் இருக்கிறது மத்தியஸ்தநாத சுவாமி கோயில். மிகப் பழமையான இந்த சிவன் கோயிலில் முறையாக வேண்டிக்கொண்டால் தீராத வழக்குகளிலும் சாதகமாக தீர்ப்பு வரும் என்பது நம்பிக்கை. ப.சிதம்பரம் கைதாகி ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்தபோது இங்கு வந்து வேண்டிக்கொண்டதாம் கார்த்தி சிதம்பரம் தரப்பு. இதையடுத்தே தந்தைக்கு தடைகள் நீங்கி சிறைக்கதவுகள் திறந்ததாம்.

இந்தநிலையில், கடந்த 4-ம் தேதி, டெல்லியில் சோனியா, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.கே.வேணுகோபால் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்களாம். அதே சமயத்தில் மத்தியஸ்தநாத சுவாமி கோயிலில் கார்த்தி சிதம்பரத்தின் ஏற்பாட்டில் சிறப்பு யாகம் ஒன்று நடத்தப்பட்டதாம். கும்பகோணம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த 11 சிவாச்சாரியார்கள் சேர்ந்து நடத்திய இந்த யாகத்தில் கார்த்தி சிதம்பரமும் கலந்துகொண்டார்.

யாகம் முடியும் தருவாயில், அங்கிருந்த தனது விசுவாசிகளிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “நான் மனதில் ஒன்றை நினைத்திருக்கிறேன். அது நடந்துருச்சுன்னா... இந்தக் கோயிலுக்கு எனது செலவில் கும்பாபிஷேகமே நடத்தி வெச்சுடுறேன்” என்று சொன்னாராம். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் காங்கிரஸ் எம்எல்ஏ-வான திருமகன் ஈவெரா திடீர் மரணமடைந்தார். அதனால், காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in