ராகுலுக்கு ஆதரவாக கைதூக்கியவர்களை ராவிய கார்த்தி!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தேர்வுசெய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் (பிசிசி மெம்பர்ஸ்) கூட்டம் கடந்த 19-ம் தேதி சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, “ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும். இதை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் கைகளைத் தூக்கி ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம். அதன்படியே கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பொதுக்குழு உறுப்பினர்களும் கைகளைத் தூக்கியும் கைகளை தட்டியும் ஆராவாரம் செய்தார்களாம். இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்களாம். இந்த நிலையில், நேற்று முன் தினம் (செப்டம்பர் 22) சிவகங்கை வேலுநாச்சியார் கெஸ்ட் ஹவுஸ் வந்த கார்த்தி சிதம்பரம், அங்கு வந்திருந்த தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மூன்று பேரிடம், “என்னய்யா... பிசிசி கூட்டத்துக்கு போனீங்களே என்ன நடந்துச்சு?” என்று கேட்டாராம். அதற்கு அந்த மூவரும், “ராகுல் காந்திதான் தலைவரா வரணும்னு அழகிரி பேசுனாரு. எல்லாரையும் கையத் தூக்கச் சொன்னாங்க. நாங்களும் தூக்கிட்டு வந்தோம்” என்றார்களாம். இதைக் கேட்டு சுருக் ஆன கார்த்தி, “ஏய்யா... உங்கள கூட்டத்துக்குப் போங்கன்னு தானே சொன்னேன்... கையத் தூக்கவா சொன்னேன். கையத் தூக்கிட்டு வந்துட்டு அத பெருமையா எங்கிட்டயே சொல்றீங்க” என்றாராம். அந்த நேரத்தில் இன்னொரு பொதுக்குழுவும் அங்குவர, “ஏய்யா... நீயும் கையத்தூக்கிட்டு வந்தியாக்கும்?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் காரில் ஏறிவிட்டாராம் கார்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in