கார்கே வெற்றியைக் கொண்டாடியது குத்தமாய்யா?

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

”என்னை மாநில தலைவர் ஆக்கினால் காங்கிரஸ் கட்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வேன்” என்று கார்த்தி சிதம்பரம் அவராகவே வந்து வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், “சொந்த மாவட்டத்திலேயே கட்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரியாத இவருக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால்...” என்று இழுக்கிறார்கள் சிவகங்கை காங்கிரஸ்காரர்கள்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ப.சிதம்பரம் கைநீட்டுபவர்கள் தான் இதுவரை மாவட்ட தலைவர்களாக வந்திருக்கிறார்கள். அப்படித்தான் இப்போதைய தலைவர் சத்தியமூர்த்தியும் தலைவராக வந்தார். நாற்பதாண்டு கால காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி, கார்த்திக்கும் விசுவாசமாகவே இருந்தார்.

இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் ஆனதும் கார்த்தியின் எதிர்கோஷ்டியினர் காரைக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அந்தக் கொண்டாட்டத்தில் வெள்ளந்தியாக சத்தியமூர்த்தியும் கலந்து கொண்டாராம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேராக கார்த்தியின் எம்பி அலுவலகத்துக்குப் போனாராம் சத்தியமூர்த்தி. அப்போது, அங்கே இருந்தவர்கள் சத்தியமூர்த்தியை நடத்திய விதமே வித்தியாசமாக இருந்ததாம். சத்தியமூர்த்தியை போனில் தொடர்புகொண்ட கார்த்தியும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டியதாகத் தெரிகிறது. அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாத சத்தியமூர்த்தி ஆதங்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

கணபதி ஹோமத்தில் சத்தியமூர்த்தி...
கணபதி ஹோமத்தில் சத்தியமூர்த்தி...

வழக்கமாக சிவகங்கையிலும் காரைக்குடியிலும் இருக்கும் எம்பி அலுவலகங்களைத்தான் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயன்படுத்துவார்கள். தனியாக மாவட்ட தலைவர் அலுவலகம் ஏதும் இதுவரை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், இனிமேல் கார்த்தியின் அலுவலகத்துக்குப் போனால் மரியாதை இருக்காது என்று தெரிந்துகொண்ட சத்தியமூர்த்தி, சிவகங்கையில் புதிதாக கட்சி அலுவலகத்துக்கு இடம் பார்த்து இன்று காலையில் கணபதி ஹோமம் நடத்தி இருக்கிறார்.

இதேபோல் காரைக்குடியிலும் பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து உட்காரப் போகிறாராம் சத்தியமூர்த்தி. இதையெல்லாம் எடுத்துக் கோத்துத்தான், “கார்த்திக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் கலகம் தான்” என்று கொளுத்திப் போடுகிறது எதிர்க்கோஷ்டி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in