
திருச்செங்கோடு எம்எல்ஏ-வான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக தவறாது கலந்து கொள்கிறார். அந்த இடத்திலேயே விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அதை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார்.
இந்த வாரம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஈஸ்வரனிடம், “உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறேன்” என பரிவுடன் கேட்டாராம் ஆட்சியர் ஸ்ரேயாசிங். அதற்கு, “தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதும் கோரிக்கைகள் இல்லை. உங்களுக்கு ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் சொல்லுங்கள்... முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றித் தருகிறேன்” என அசரடித்தாராம் ஈஸ்வரன்.