விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்டப்போகிறாரா மோடி?

விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்டப்போகிறாரா மோடி?

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனியாக ஜனதா கட்சி நடத்திய காலத்திலிருந்தே, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டவேண்டும் என குரல்கொடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்திக்கு முதல்முறையாக பிரதமர் மோடி பசும்பொன் வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பட்டியலின தலைவர்கள் பக்கம் பாஜக சாய்ந்ததால் தேவரினத்து மக்கள் பாஜகவை பாராமுகமாகவே இருக்கிறார்கள். இதைச் சரிப்படுத்துவதற்காகவே மோடியின் பசும்பொன் வருகை திட்டமிடப்படுவதாகச் சொல்கிறார்கள்.

இந்தநிலையில், மோடி பசும்பொன் வருகிறார் என்ற செய்தி வெளியானதுமே மதுரை விமானநிலையத்துக்கு பெயர் சூட்டும் பிரச்சினை பிரதானமாகப் பேசப்படுகிறது. தேவரின அமைப்புகள் சில அவசர அவசரமாக கூடிப்பேசி, மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்டவேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேவரின அமைப்புகள் பலவும் நெடுங்காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பசும்பொன் வருகையின் போது மோடி இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என பாஜக தரப்பிலிருந்து செய்திகளைப் பரப்புகிறார்கள். ஒருவேளை மோடி, விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்டுவதாக அறிவித்தால், தங்களது கோரிக்கையை ஏற்றுத்தான் அறிவித்தார் என காட்டுவதற்காகவும் சிலர் முந்திக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.

இது இப்படி இருக்க, மோடியின் பசும்பொன் வருகைக்கு தங்களின் முன்னாள் பார்ட்னரான டாக்டர் கிருஷ்ணசாமி என்ன ரியாக்‌ஷன் காட்டப்போகிறார் என்பதையும் பாஜக வட்டாரம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in