
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். ஆனால், இதுவரை வார்டு கவுன்சிலர் உள்பட எந்தப் பதவிக்கும் வந்ததில்லை. சீனியர் என்ற முறையில் இவரை ஒருமுறை மட்டும் வஃக்பு வாரியத் தலைவர் பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா.
இத்தனைக்கும் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அதற்கான படிவத்தில் கையெழுத்திட்ட 11 பேரில் உசேனும் ஒருவர். குமரி மாவட்ட அதிமுகவின் முதல் செயலாளரும் இவரே. ஆனாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைவிட இப்போது ஈபிஎஸ் காலத்தில் அதிமுகவினரால் அதிகம் மதிக்கப்படுகிறார் உசேன். இன்று தமிழ்மகன் உசேனுக்கு பிறந்த நாள். இத்தனை நாளும் இவரது பிறந்த நாள் அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் கடந்துபோகும். ஆனால், இந்த ஆண்டு, நாளிதழ் விளம்பரங்கள், சுவரொட்டிகள் என உசேனை உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்துவிட்டார்கள் குமரி மாவட்ட அதிமுககாரர்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோயிருக்கும் உசேன், ”எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சிக்காக மாடாய் உழைத்தேன். எடப்பாடிதான் அதற்கான அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்” என தனக்கு வாழ்த்துச் சொல்லும் நட்புகளிடம் நெருக்குருகி சொல்லி வருகிறாராம்!