
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை வைத்து திமுகவும் பாஜகவும் இன்னும் எத்தனை மண்டைக்குத்து வைபவங்களை நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. இந்தத் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் சமய மாநாட்டை இம்முறை இந்து அமைப்புகளை நடத்தவிடாமல் அறநிலையத் துறையே நடத்தும் என்று குறுக்கே நின்றார் அமைச்சர் மனோ தங்கராஜ். இந்த விவகாரத்தை அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் திருப்ப ஆரம்பித்ததும் மாநாட்டு ஏற்பாட்டில் இந்து அமைப்புகளையும் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால், மனோ பெயர் இல்லாமலேயே நோட்டீஸ்களை அச்சடிக்கவைத்து தங்களின் செல்வாக்கைக் காட்டின இந்து அமைப்புகள்.
இந்த நிலையில், இந்து அபிமானிகளை தங்கள் பக்கம் ஈர்க்க, தோல்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது திமுக. இதை முன்னின்று ஏற்பாடு செய்தவர் அமைச்சர் மனோ தங்கராஜ். கேரள, தமிழக முதல்வர்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இந்துக்களுக்குள்ளேயே விதைக்கப்பட்ட சாதிய பாகுபாடுகள் குறித்து உரக்கப் பேசினார்கள். தோல்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவை கல்லூரிகளிலும் நிகழ்ச்சியாக நடத்தவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பில் தற்போது முனைப்புக் காட்டி வருகிறார்கள். இதைவைத்து இந்துக்களை தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பது திமுகவின் கணிப்பு.
திமுகவின் இந்தத் திட்டத்தை முறியடிக்க திட்டம் வகுத்த இந்து அமைப்புகள், சமய மாநாட்டு நிகழ்ச்சிக்கு, திருவிதாங்கூர் மகாராணி வம்சாவளியைச் சேர்ந்த இப்போதைய ராணி, அஸ்வதி திருநாள் கவுரிலட்சுமிபாயை மண்டைக்காடு கோயிலுக்கு அழைத்து வந்து அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் திமுகவின் அடுத்த திட்டம் என்னவோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!