
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வடக்கு மாவட்டத்துக்கும் இன்னொரு முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெற்கு மாவட்டத்துக்கும் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே, இதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு எக்ஸ் மினிஸ்ட்டரான சி.த.செல்லப் பாண்டியனும் அதிமுகவுக்குள் அரசியல் செய்கிறார். அண்மையில் மகன்கள் இருவரும் வில்லங்க வழக்குகளில் சிக்கிக் கொண்டதால் அரசியலாவது சோபிக்கும் என நினைத்தார் செல்லப்பாண்டியன். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரண்டை மட்டும் ஒதுக்கி தன்னை தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்பது செல்லப்பாண்டியனின் கனவு. இதற்காக ஈபிஎஸ் வீட்டுக்கு நடையாய் நடந்தாராம். ஆனாலும் அண்ணனின் கனவு பலிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில் அப்படியே ஓபிஎஸ் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்த்தாராம் செல்லப்பாண்டியன். முத்துநகருக்கு முத்தான ஆளைத் தேடிக்கொண்டிருந்த ஓபிஎஸ், செல்ஃப்பாக வந்த செல்லப் பாண்டியனை வந்த வேகத்திலேயே தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் ஓபிஎஸ் அணிக்கு டாட்டா சொல்லிவிட்டார் சேனாபானா. ”அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் தீர்ந்து கட்சி முழுமையாக எனது கட்டுப்பாட்டில் வந்ததும் நீங்கள் எதிர்பார்க்கும் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி உங்களைத் தேடிவரும்; அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் விரும்பினால், எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக நீங்களே போட்டியிடலாம்” என்று இனிக்கப் பேசி செல்லப்பாண்டியனை வழியனுப்பி வைத்தாராம் ஈபிஎஸ்.
தூத்துக்குடி தொகுதியை பாஜக தரப்பில் சசிகலா புஷ்பாவுக்காக ரிசர்வ் செய்திருப்பதாக ஒரு பேச்சு அலையடிக்கிறது. அப்படி ஒருவேளை, அவருக்காக இந்தத் தொகுதியை பாஜக வாங்கிக் கொண்டால் நமது நிலைமை சிக்கலாகிவிடும் என்பதால், “நமக்கு எம்பி சீட் எல்லாம் வேண்டாம்பா... மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியைக் குடுத்தாங்கன்னா போதும்” என்று தனது ஆதரவாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறாராம் சேனாபானா!