பூபதியை புஸ்வாணமாக்கிய இந்திரன் சந்திரன்!

பூபதியை புஸ்வாணமாக்கிய இந்திரன் சந்திரன்!

தற்போது மாற்றப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்களில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பூபதியும் ஒருவர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திருவள்ளூரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ஸ்டாலின். அப்போது ஜெகத்ரட்சகன் ஆதரவாளராக இருந்த பூபதி ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் மற்றும் செங்கோல் கொடுத்து கெத்து காட்டினார். இதில் குளிர்ந்து போன ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, பூபதியை மேற்கு மாவட்டச் செயலாளராக்கினார். இந்த நிலையில், திமுக எம்எல்ஏ-க்களை உதாசினப்படுத்துவதாகவும் தன்னை ஆளாக்கிய ஜெகத்தையே அலட்சியம் செய்வதாகவும் பூபதிக்கு எதிராக தலைமைக்கு பொறணிகள் பறந்தன.

வசூல் விவகாரங்களிலும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக தலைமைக்கு சிலர் புகார்களைத் தட்டிவிட்டார்களாம். போதாதுக்கு, திருவள்ளூர் எம்எல்ஏ-வான வி.ஜி.ராஜேந்திரனும் திருத்தணி எம்எல்ஏ-வான சந்திரனும் பூபதி எக்காரணம் கொண்டும் மீண்டும் மா.செ ஆகக்கூடாது என திட்டமிட்டு அன்டர்கிரவுண்ட் ஆபரேஷன் நடத்தினார்களாம். இந்தத் தகவல் தெரிந்து சபரீசன் ஆபீஸ் வாசலுக்குப் போனாராம் பூபதி. அங்கேயும் வேலை நடக்காமல் போனதால் பூபதி வீழ்த்தப்பட்டு திருத்தணி எம்எல்ஏ-வான சந்திரன் மாவட்டச் செயலாளராக வந்து உட்கார்ந்துவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in