காங்கிரஸ் துணை மேயரின் காலை வாரும் திமுக!

 சாரதாதேவி
சாரதாதேவி

சேலம் துணை மேயரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவியை இறக்கியே ஆக வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் வரிந்துகட்டி வேலைபார்க் கிறார்களாம். சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 47 வார்டுகளை திமுக வென்றது. அதனால் மேயர் பதவியை தங்களுக்கு வைத்துக்கொண்டு துணை மேயர் பதவியை இரண்டு வார்டுகளில் மட்டுமே வென்ற காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தது. அதன்படி சாரதாதேவி துணை மேயர் ஆனார்.

இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த இந்துஜாவை துணை மேயராக்க அவரது தந்தையும் அரிசிபாளையம் பகுதி செயலாளருமான மணல்மேடு மோகன் பகீரதபிரயத்தனம் செய்கிறாராம். இதையொட்டி, சாரதாதேவிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக திமுக கவுன்சிலர்களிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்களாம். இந்தத் தகவல் அரசல்புரசலாக வெளியில் கசிந்தை அடுத்து விஷயத்தை கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறாராம் சாரதாதேவி. “கூட்டணி தர்மத்தை மீறி ஒருவேளை நீங்கள் சாரதாதேவியை இறக்கிவிட்டு இந்துஜாவை துணை மேயராக்கினாலும் உடனே பதவியை ராஜினாமா செய்யச்சொல்வாரே ஸ்டாலின்” எனக் கேட்டால், ”தேர்தல் சமயத்தில் கூட்டணி குலைந்துவிடக்கூடாது என்பதற்காக தளபதி அப்படிச் சொன்னது வாஸ்தவம் தான். ஆனால், அவர் சொன்னதைக் கேட்டு எல்லாருமா பதவியை ராஜினாமா செஞ்சுட்டாங்க... இன்னும் பலபேரு பதவியில தொடரத்தானே செய்யுறாங்க. அவங்களுக்கு ஆனது எங்களுக்கும் ஆச்சு” என்று தில்லாகவே சொல்கிறது திமுக வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in