தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தருமபுரி எம்பி!

செந்தில்குமார்
செந்தில்குமார்

“நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை” என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவரது கட்சியில் இருப்பவர்கள் அதை திரும்பத் திரும்பப் பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் முக்கியமானவர் தருமபுரி எம்பி-யான செந்தில்குமார்.

அண்மையில், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரியை புனரமைக்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இதற்காக செந்தில்குமாரையும் அழைத்திருந்தார்கள் அதிகாரிகள். அங்கே பூமி பூஜை நடத்தப்பட்டதைப் பார்த்துவிட்டு, “அரசு விழாவில் குறிப்பிட்ட ஒரு மதத்தின் சடங்குகள் எதற்கு?” என கேள்வி எழுப்பிய செந்தில்குமார், பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து கண்டித்தார். இந்த வீடியோ வைரலானதால், திமுகவின் இந்து விரோத நடவடிக்கையைப் பாரீர் என விமர்சனங்கள் வெடித்தது. இந்த நிலையில் மீண்டும் இன்று ஒரு அதகளத்தை நிகழ்த்தி இருக்கிறார் செந்தில்குமார். அதியமான்கோட்டையில் புதிய நூலகம் கட்டுவதற்கான பூமிபூஜை  நிகழ்ச்சிக்கு வந்த அவர், அங்கு பூஜைக்கு வைத்திருந்த கற்களை காலால் உதைத்தாராம். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். “இனிமேல் இதுபோன்ற விழாக்களுக்கு எல்லாம் செந்தில்குமாரை அழைக்காதீர்கள்” என திமுகவினரே வருத்தப்பட்டு சொல்லும் அளவுக்கு இருந்திருக்கிறது எம்பி-யின் செயல்பாடு. “அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் விட்டால் ஏன் அழைக்கவில்லை என்று கேட்கும் இவர், நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் இப்படி அதகளம் செய்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார். எங்களுக்குத்தான் இரண்டு பக்கமும் இடி. என்ன செய்ய...” என்று ஆதங்கப்படுகிறார்கள் அதிகாரிகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in