
அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதையொட்டி, ஜெயலலிதா காலத்தில் அதிமுக சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட தேவர் தங்கக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் வங்கியிலிருந்து யார் எடுத்துக் கொடுப்பது என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது. மதுரையிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டுள்ள தேவர் கவசத்தை கடந்த ஆண்டு வரை கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தான் எடுத்துக்கொடுத்தார். ஆனால், இந்த ஆண்டு அது நடக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இம்முறை ஓபிஎஸ் தரப்பிலும் ஈபிஎஸ் தரப்பிலும் வங்கி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். “தர்மம் வெல்லும்... வழக்கம் போல ஐயா ஓபிஎஸ் தான் தேவர் கவசத்தை எடுத்துக் கொடுப்பார்” என ஓபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பரிக்கிறார்கள்.
அதேசமயம், “கட்சியின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைத்தது போல், தேவர் கவசம் வைத்திருக்கும் லாக்கர் சாவியையும் சீனிவாசனிடம் ஓபிஎஸ் ஒப்படைத்தே ஆகவேண்டும்” என மல்லுக்கு நிற்கிறதாம் ஈபிஎஸ் டீம். முக்குலத்தோரின் அரசியல் முகவரியாக தன்னைக் காட்டிக்கொண்டு வரும் ஓபிஎஸ்ஸிடம் இருந்து எப்படியாவது தேவர் தங்கக் கவசத்தை பெற்றுவிடவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறதாம் ஈபிஎஸ் டீம். அதேபோல், தேவர் கவசத்தையும் அவர்களிடம் கொடுத்து எஞ்சியுள்ள அரசியல் அடையாளத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் டீமும் கவனமாக காய்நகர்த்துகிறதாம்.
“ஒருவேளை, தங்கள் வசம் ஒப்படைப்பதில் வங்கி நிர்வாகத்துக்கு சட்டச் சிக்கல் இருந்தால், மதுரை ஆட்சியர் வசம் கவசத்தை ஒப்படைக்கட்டும். அவர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் ஒப்படைத்தால் அவர் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் கவசத்தை ஒப்படைக்கலாம். அதைவிடுத்து ஈபிஎஸ் டீமிடம் தரவேகூடாது” என ‘பிளான் பி’-யை வங்கி நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.