ராமஜெயம் வழக்கு; சிக்கியவர்கள் கேட்ட சிக்கலான கேள்வி!
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகளே விசாரிக்க முடியாமல் வழக்கை ஒப்படைத்துவிட்ட நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் பிலனாய்வுக் குழுவினர் 13 ரவுடிகளை பிடித்துக் கொண்டு வந்து கோர்ட்டில் நிறுத்தி இருக்கிறார்கள். இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த நீதிமன்றத்தில் அனுமதிபெறவே இந்த ஆஜர் படலம்.
தங்களுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று 13 பேரும் தெரிவித்திருந்தாலும் தங்களிடம் உண்மை அறியும் சோதனையை நடத்த சம்மதமும் தெரிவித்திருக் கிறார்களாம். அதேசமயம், இதுவிஷயமாக விசாரணை அதிகாரிகளிடம் பேசிய அந்த ரவுடிகளில் சிலர், “எங்களிடம் இந்த சோதனையை நடத்த இத்தனை அழுத்தம் கொடுக்கும் நீங்கள், ராமஜெயத்தின் உறவினர்கள் சிலரது பெயர்களை நாங்கள் சொல்கிறோம். அவர்களிடம் உங்களால் இந்த சோதனையை நடத்த முடியுமா?” என்று கேட்டு திகைக்க வைத்தார்களாம். இதனிடையே, இந்த வழக்கில் மன்னார்குடி பக்கம் உள்ள பிரபல அரசியல் புள்ளிகள் சிலரையும் சேர்க்க சிலர் வலை பின்னுவதாகவும் திருச்சி வட்டாரத்தில் ஒரு செய்தி சுற்றிக்கொண்டிருக்கிறது.