குமரி மீனவர்களை குறிவைத்து நெருங்கும் பொன்னார்!

மீனவ கிராமத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்...
மீனவ கிராமத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்...

பாஜகவைவிட்டு விலகியே நின்று பழகிப்போன குமரி மாவட்ட மீனவர்களில் ஒருபகுதியினர் இப்போது பாஜகவை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், மாவட்டத்தில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மீதான அதிருப்தி என்கிறார்கள். கடந்த ஆட்சியில் இனயம் பகுதியில் துறைமுகம் அமைக்க பெரும் முயற்சி எடுத்தார் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன். இந்தத் திட்டத்தை எதிர்த்த மீனவர்கள் பாஜகவையும் ஒதுக்கினார்கள். இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்குக்கூட பொன்னாரால் இனயம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குள் அச்சமின்றி நுழையமுடியவில்லை. கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில் கணிசமான அளவுக்கு மீனவ வாக்குகள் இருக்கின்றன. இந்தத் தொகுதிகள் இரண்டும் இப்போது காங்கிரஸ் வசம். இந்தப் பகுதிகளில் பாஜகவின் இந்துத்துவா கொள்கையை பிரச்சாரம் செய்தே காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்று வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வாக்குகளை வாங்கிவிடும் காங்கிரஸார், அதன் பிறகு தொகுதி மக்களின் பிரச்சினைகளில் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்களாம். இப்போது இந்தத் தொகுதிகளின் எம்எல்ஏ-க்களாக இருக்கும் ராஜேஷ்குமாரும் பிரின்ஸும் அப்படித்தான் இருக்கிறார்களாம். இவர்களின் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே இனயம் சுற்றுவட்டார மீனவர்கள் பாஜக நோக்கி திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த மீனவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்த பொன்னார், இனயம், சின்னத்துறை, புத்தன் துறை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களை தேடிப்போய் பார்த்துப் பேசி இருக்கிறார். இனயம் கிராமத்தில் மீனவர்களோடு கடற்கரையில் அமர்ந்து பேசிய அவர், மீனவர்களுக்கு சில வாக்குறுதிகளையும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம். “கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் கடலோர கிராமங்களில் நுழையவே முடியாமல் இருந்த பொன்னார் இப்போது அங்கே அடிபதித்துவிட்டார். இனிமேல் பாருங்கள் காங்கிரஸுக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சி வைத்தியங்களை அவர் கொடுப்பார்” என்று பொடிவைக்கிறார்கள் குமரி மாவட்ட பாஜககாரர்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in