பனையூர் பாபு பண்றது சரிதானா?

பனையூர் பாபு
பனையூர் பாபு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் விசிக எம்எல்ஏ பனையூர் மு.பாபு. இவர் மீது கண்ணெல்லாம் புண்ணாகும் அளவுக்கு வருத்தப்பட்டுக் கிடக்கிறார்கள் வாக்களித்த மக்கள். நல்லது கெட்டதுக்குக்கூட தொகுதிப்பக்கம் வரமாட்டேங்கிறாரே என்பது இவர் மீது மக்களுக்கு இருக்கும் பெருத்த ஆதங்கம். இந்த நிலையில், செய்யூர் தொகுதிக்குள் வரும் கீழ்மருவத்தூர் பகுதியில் திறப்பு விழாவுக்காக சில கட்டிடங்கள் காத்துக் கிடந்தன. அவற்றை திறப்பதற்காக தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பாபுவை அழைத்திருந்தாராம் திமுகவைச் சேர்ந்த கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.மாசிலாமணி.

நேற்று ஏற்பாடான இந்த விழாவில் கலந்துகொள்ள பாபுவும் சம்மதம் சொல்லி இருந்தாராம். இதனால் தடபுடலான ஏற்பாடுகளைச் செய்துவைத்திருந்தாராம் மாசிலாமணி. காலையிலிருந்தே பொதுமக்கள் நிகழ்விடத்தில் காத்திருந்த நிலையில் குறித்த நேரத்தை கடந்தும் பாபு வரவில்லையாம். பொறுமை இழந்த மாசிலாமணி, பாபுவுக்குப் போன் போட்டு விசாரித்திருக்கிறார். அதற்கு கொஞ்சம் அலட்டிக்கொள்ளாத பாபு, “‘எனக்கு வேற வேலை இருக்கு... நீங்களே பாத்துக்குங்க” என்று சொல்லிவிட்டு போனை கட்பண்ணிவிட்டாராம். இதனால் வேறு வழியின்றி, உள்ளூர் முக்கியஸ்தர்களை வைத்து விழாவை நடத்தி முடித்தாராம் மாசிலாமணி.

“இதுக்குக்கூட நேரம் ஒதுக்கமுடியாத அளவுக்கு நம்ம எம்எல்ஏ நமக்காக உழைக்கிறாராக்கும்” என்று கீழ்மருவத்தூர் மக்கள் அலுத்துக் கொள்ளும் அதேசமயம், இதற்குள் இன்னொரு உள்குத்து கதையையும் சொல்கிறார்கள். செய்யூர் யூனியனின் திமுக சேர்மன் ஏழுமலைக்கும் மாசிலாமணிக்கும் உட்கட்சிப் பகை இருக்கிறதாம். இந்த நிலையில், மாசிலாமணியை வாரிவிட வேண்டும் என்பதற்காகவே பாபுவை விழாவுக்கு வரவிடாமல் ஏழுமலை அணைகட்டிவிட்டதாக ஒரு கதை சொல்கிறார்கள் செய்யூர் திமுக வட்டாரத்தில்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in