அதற்காகத்தான் ஐம்பது மத்திய அமைச்சர்கள் வருகிறார்களாம்!

அண்ணாமலை
அண்ணாமலை

அடுத்த 20 நாட்களில் தமிழகத்துக்கு 50 மத்திய அமைச்சர்கள் வரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திகில் கிளப்பி இருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் உரியமுறையில், உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதே அமைச்சர்கள் வருகையின் நோக்கம் என்கிறார் அண்ணாமலை. எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்குப் போக வேண்டும் என்ற பக்கா திட்டத்துடன் வரவிருக்கிறார்களாம். திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வது மட்டும் நோக்கமல்ல... அந்தத் திட்டங்களை எல்லாம் உங்களுக்குத் தந்தது மோடி அரசு என்பதை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதுதான் பயணத்தின் முக்கிய நோக்கமாம்.

மத்திய அரசின் திட்டங்கள் இன்னாருக்கெல்லாம் (தகுதிகள் இருந்தும்) போய்ச் சேரவில்லை என்ற பட்டியலை மாவட்ட வாரியாக பாஜக நிர்வாகிகள் முன்பே பாஜக தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்களாம். அந்த மனுக்களை கையோடு எடுத்து வரும் அமைச்சர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப் போகிறார்களாம். இதனால், மத்திய அமைச்சர்கள் வருகையானது மாவட்ட ஆட்சியர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தங்களது வார்டுகள், பகுதிகள் ஆளும் கட்சியினரால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தலைமையிடம் புலம்பி இருக்கிறார்களாம். மத்திய அமைச்சர்கள் வருகையின் போது அத்தகைய உள்ளாட்சிப் பிரநிதிகளையும் சந்தித்து உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களின் வார்டுகளுக்கு, பகுதிகளுக்கு கொண்டுவந்து சேர்க்கவும் முயற்சி எடுக்கப் போகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in