விசுவாச அதிகாரிகள் விஜயபாஸ்கருக்கு தகவல்!

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

அண்மையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்னொரு முறை அதிரடி(!?) சோதனை நடத்தினர். இதை பதற்றமே இல்லாமல் எதிர்கொண்ட விஜயபாஸ்கர், “எனது வீட்டில் நடந்த ரெய்டில் எதுவுமே சிக்கவில்லை” என்று காலரைத் தூக்கிவிடாத குறையாகச் சொன்னார். அத்துடன், “இதுபோல இனி எத்தனை ரெய்டு வந்தாலும் ஈஸியா சமாளிச்சிடலாம்” என்று தனது ஆதரவாளர்களிடம் கொஞ்சம் சவுண்டாகவே சொன்னாராம். அந்தளவுக்கு ஆளும் தரப்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் ஆட்களை செட் பண்ணிவைத்திருக்கிறாராம். இந்த முறை ரெய்டு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பே விஜயபாஸ்கருக்கு தகவல் வந்துவிட்டதாம். இதைத் தொடர்ந்து தனக்குச் சொந்தமான இடங்களில் இருந்த மிச்சம் சொச்சம் ஆவணங்களையும் ரகசிய இடத்துக்கு மாற்றிவிட்டாராம். கடந்த ஆட்சியில் கல்குவாரிகள் மூலம் விஜயபாஸ்கரிடம் ‘வளமடைந்த’ அதிகாரிகளே இந்தத் தகவல்களை நன்றி விசுவாசத்துடன் விஜயபாஸ்கருக்கு போட்டுக் கொடுத்தார்களாம். இந்தத் தகவல் திமுக தலைமை வரைக்கும் போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். இந்தநிலையில், ஏற்கெனவே பேசிக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி, மின் கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆளும் கட்சியை ரொம்பவே ஏசிவிட்டார் விஜயபாஸ்கர். அதுவும் முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசுமளவுக்கு எல்லை மீறிவிட்டார். இதனால் செம கடுப்பில் இருக்கும் ஆளும்கட்சி தலைமை, கரோனா காலத்தில் நடந்த மருந்து கொள்முதல் விவகாரங்களை தூசுதட்டி எடுக்கச் சொல்லி இருக்கிறதாம். இதைவைத்து விஜயபாஸ்கருக்கு எதிராக அடுத்த அம்பு ஏவப்படலாம் என்கிறார்கள். அதற்கு முன்னதாக, உள்ளே இருந்து கொண்டே விஜயபாஸ்கருக்காக உளவு வேலை பார்க்கும் அதிகாரிகளைக் களையெடுக்கவும் உத்தரவுகள் பறந்திருக்கிறதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in