குமரியில் எதற்காக இரண்டு நாள் முகாமிட்டுள்ளார் அண்ணாமலை?

அண்ணாமலை
அண்ணாமலை

ஏற்கெனவே கல்லூரி மாணவர்கள் மத்தியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) கிளைபரப்பி வைத்திருக்கிறது ஆர்எஸ்எஸ். அதை இன்னும் விஸ்தரிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதன் முதல்படியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் அமர்வுகளை ஏற்பாடு செய்யும்படி அண்ணாமலையிடம் இருந்து பாஜக மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவுகள் பறந்திருக்கிறதாம்.

அந்தவகையில் கன்னியாகுமரியில் இன்று பள்ளி - கல்லூரி மாணவர்களில் இந்து சிந்தனையாளர்களை தேர்ந்தெடுத்து ‘விவேகானந்தர் நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் அண்ணாமலை, ‘தேசியத்திற்கு எதிரான சிந்தனைகளை விதைப்பவர்களின் மூளைச்சலவைக்கு பலியாகக்கூடாது’ என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கத்தான் இந்த நிகழ்ச்சியாம்.

இந்நிகழ்வில் இன்று பங்கேற்கும் அண்ணாமலை குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிடுகிறார். கன்னியாகுமரி, பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனின் சொந்த ஊர். இங்கே பாஜக அவரது கண்ணசைவில் தான் பெரும்பாலும் இயங்கும். இதனால், தமிழிசை பாஜக தலைவராக இருந்த போதுகூட குமரி மாவட்டத்தில் அதிகம் தலைக்காட்டாமல் கவனமாக அரசியல் செய்தார்.

தற்போது, தமிழக பாஜகவில் கேசவ விநாயகனுக்கும் அண்ணாமலைக்கும் உள்ளுக்குள் காரசார மோதல் நீடித்து வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் அங்கே இரண்டு நாட்கள் முகாம் போட்டிருக்கிறாராம் அண்ணாமலை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in