சின்னப்பா சிறப்பாகவே செயல்படுகிறார்! - மதிமுக

சின்னப்பா
சின்னப்பா

அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான கு.சின்னப்பா வைகோவுக்கு மிக நெருக்கமானவர். இந்த நிலையில், கட்சியில் சீனியரான சின்னப்பா தொகுதிக்குள் அதிகம் தலைகாட்டுவதில்லை என்றும், இதனால் அவரது மாவட்டச் செயலாளர் பதவிக்கு சிக்கல் வரலாம் எனவும் அண்மையில் தகவல்கள் பரவின. சின்னப்பாவின் செயல்பாடுகளை இருட்டடிப்புச் செய்யவேண்டும் என்பதற்காகவே சிலர் திட்டமிட்டு இப்படியான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து அரியலூர் நகர மதிமுக செயலாளர் மனோகரனிடம் விசாரித்தபோது, “சின்னப்பா அனைவரும் எளிதில் அணுகக் கூடியவர். தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்பவர். தன்னிடம் வரும் மக்களின் கோரிக்கை மனுக்களை உரிய அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதை நிறைவேற்றிக் கொடுப்பதிலும் கவனமாக இருப்பார்.

கட்சியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதனால் தான் 1996 முதல் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். தனக்கு பதவி வேண்டாம் என்று பெருந்தன்மையோடு சொன்னவர் அவர். நாங்கள் தான் ‘நீங்கள் இப்பதவியில் இருப்பதுதான் எங்களுக்கு பெருமை’ எனச் சொல்லி தொடரவைத்தோம். பொதுவாழ்க்கையிலும் சின்னப்பா பல தியாகங்களைச் செய்திருக்கிறார். அரியலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தவும் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும் சின்னப்பா எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். மதிமுக மாவட்டச் செயலாளராகவும் மக்கள் பிரதிநிதியாகவும்” சின்னப்பா தனது பணிகளைச் செம்மையாகவே செய்துவருகிறார்” என்று சொன்னார்.

ஆனாலும், சின்னப்பாவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் திட்டமிட்டு அவருக்கு எதிரான வதந்திகளைப் பரப்புவதாக சொல்லப்படுகிறது. அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சி களிலும் தற்போது சின்னப்பா தரப்பு இறங்கி இருக்கிறதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in