அண்ணாமலைக்கு செக் வைக்க அதிமுகவுடன் நேசம் பாராட்டும் எல்.முருகன்!

எல்.முருகனுடன் அண்ணாமலை
எல்.முருகனுடன் அண்ணாமலை

அதிமுகவுடன் தான் கூட்டணி என அமித் ஷாவே சொன்ன பிறகும் அண்ணாமலை - ஈபிஎஸ் மோதல் அடங்கியபாடில்லை. இதனிடையே இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் அதிமுக தரப்புக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறாராம்.

மக்களவைத் தேர்தலில் இந்து அபிமானிகள் அதிகம் உள்ள தென் சென்னை தொகுதியில் இம்முறை பாஜக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என கணித்திருக்கிறாராம் எல்.முருகன். இங்கே நாராயணன் திருப்பதி அல்லது தனக்கு நெருக்கமான வெறொரு விசுவாசியை நிறுத்துவதும் அவரது திட்டம் என்கிறார்கள். ஆனால், அதிமுகவின் துணை இல்லாமல் இங்கே வெற்றிக் கனியைச் சுவைப்பது அத்துணை சுலபமல்ல என தெரிந்துவைத்திருக்கும் முருகன், ஈபிஎஸ் தரப்பிடம் ரொம்பமே நேசம் பாராட்டுகிறாராம்.

இதையெல்லாம் மனதில் வைத்தும் அண்ணாமலைக்கு ஷாக் கொடுக்கும் விதமாகவும் தான், “அதிமுக கூட்டணி உறுதி. அவர்களிடம் பாஜகவுக்கு 9 சீட் கேட்டுள்ளோம்” என்று பொத்தாம் பொதுவில் போட்டுடைத்தாராம் முருகன்.

இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத அண்ணாமலை, “2019 மக்களவைத் தேர்தலில் 5 சீட்டும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 7 சீட்டும் தான் வாங்கி இருக்கிறோம். கட்சி எங்கே வளர்ந்திருக்கிறது; தேய்ந்து தானே இருக்கிறது?” என்று சொன்னதுடன் “அமித்ஷா சொன்னதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இந்தி படிக்க வேண்டும். 25 தொகுதியில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது” என்று தமிழிசை, முருகன் காலத்தில் தமிழக பாஜக எந்த வளர்ச்சியும் பெறவில்லை தனது காலத்தில் தான் அமோகமாக வளர்ந்திருக்கிறது என்று மறைமுகமாகச் சாடினாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in