அண்ணாமலை
அண்ணாமலை

42 மாவட்ட தலைவர்களுக்கு குட்பை; அதிரடிக்குத் தயாராகும் அண்ணாமலை!

தமிழக பாஜகவில் மிகப்பெரும் மாற்றத்தை அமல்படுத்த தயாராகி வருகிறாராம் மாநில தலைவர் அண்ணாமலை. அண்மையில், பாஜக மாவட்ட தலைவர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்றை அண்ணாமலைக்கு அனுப்பி இருந்தார்களாம் அவரது விசுவாசிகள். அந்த ஆடியோவில், ‘அண்ணாமலை என்ன... அவங்க அப்பனே நினைச்சாலும் என்னைய பதவியிலிருந்து நீக்கமுடியாது’ என்று அந்த மாவட்டத் தலைவர் ஜம்பமாகப் பேசி இருந்தாராம்.

இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் போட்டுக்காட்டிய அண்ணாமலை, “இப்படியான மனிதர்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி கட்சியை வளர்த்தெடுப்பது? இவர்களெல்லாம் தாங்கள் என்ன செய்தாலும் பதவியில் நீடிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பதால் தான் கட்சிப் பணிகள் முடங்கி விடுகின்றன. இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. செயல்படாத பொறுப்பாளர்களை மாற்றினால் தான் மற்றவர்களுக்கும் பயம் வரும். அந்தப் பயம் இருந்தால் தான் ஓடியாடி வேலை செய்வார்கள்” என்று சொன்னாராம்.

செயல்படாத மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்ற இதுவரை மூன்று முறை தலைமைக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பிவிட்டாராம் அண்ணாமலை. ஆனால், பாஜகவின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளரும் ஆர்எஸ்எஸ்காரருமான கேசவ விநாயகன் அதை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். முதல் முறை 10 மாவட்ட தலைவர்களை மாற்ற கடிதம் கொடுத்திருந்த அண்ணாமலை, இரண்டாவதாக 21 பேரை மாற்ற கடிதம் கொடுத்தாராம்.

கடைசியாகம் அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக 42 மாவட்ட தலைவர்களை மாற்ற தேசிய தலைமைக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி இருந்தாராம் அண்ணாமலை. அத்துடன் மாநிலக் கமிட்டியிலும் முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், கூடுதல் பொறுப்பாளர்களை நீக்கவும் பரிந்துரை செய்திருந்தாராம். அனைத்துக்கும் தற்போது ஒப்புதல் கிடைத்து விட்டதாம். அநேகமாக, தீபாவளி முடிந்ததும் சதுர்த்தி நாளான அக்டோபர் 28-ம் தேதி தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in