மீண்டும் அதிமுகவுக்கு வரும் அய்யாதுரை பாண்டியன்!

மீண்டும் அதிமுகவுக்கு வரும் அய்யாதுரை பாண்டியன்!

தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்தவர் அய்யாதுரை பாண்டியன். குஜராத் தொழிலதிபரான இவருக்கு தமிழகத்திலும் கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் உண்டு. தொடக்கத்தில் அதிமுகவில் இருந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரம்மாண்ட படை திரட்டி திமுகவில் ஐக்கியமானார். ஆனால், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான சிவபத்மநாபன் உள்ளிட்ட திமுக முன்னோடிகளுக்கு அய்யாதுரை பாண்டியனின் வரவு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

இந்த நிலையில், கடையநல்லூர் தொகுதியை குறிவைத்து தனது சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரிவழங்கினார் அய்யாதுரை. திமுக தலைமையிலும் இவருக்குத்தான் கடையநல்லூர் எனச் சொல்லி வைத்திருந்தார் களாம். ஆனால், இவர் வெற்றிபெற்றால் தனது ‘செல்வாக்கை’ பயன்படுத்தி அமைச்சர் சீட்டுக்கும் நகர்ந்துவிடுவார் என கணக்குப்போட்ட சிலர், கடையநல்லூரை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கவைத்துவிட்டார்கள்.

இதனால் பெருத்த ஏமாற்றமடைந்த அய்யாதுரை பாண்டியன், கொஞ்சமும் தாமதிக்காமல் அப்போதே அமமுகவில் இணைந்து கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் இவர் பெற்ற சுமார் 34 ஆயிரம் வாக்குகள் திமுக கூட்டணி வேட்பாளரை தோற்கடித்து அதிமுகவை ஜெயிக்க வைத்தது. இந்த நிலையில், அமமுகவிலும் அய்யாதுரை பாண்டியனுக்கு பிரச்சினை வெடித்தது. அங்கே அவருக்கு நெருக்கடி கொடுத்தவர் அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா. இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அய்யாதுரை பாண்டியனை அதிரடியாக கட்சியைவிட்டே நீக்கினார் தினகரன்.

இதனால் அலுத்துப் போன அய்யாதுரை பாண்டியன், இனி எந்தக் கட்சியிலும் போய் கைகட்டி நிற்பதில்லை. நாமே எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கி கடையநல்லூரை மட்டும் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்தார். தனது கட்சிக்கான கொடியைக்கூட அவர் வடிவமைத்துவிட்ட நிலையில், “கொஞ்சம் பொறுங்க மாவட்ட திமுகவில் மாற்றம் வரப்போகிறது. உங்களுக்கு எதிராக கொம்பு சீவிய சிவபத்மநாபனை மாற்றப் போகிறார்கள்” என்று திமுகவிலேயே அவருக்கு நெருக்கமான சிலர் சிக்னல் கொடுத்தார்களாம். இதனால் தனிக்கட்சி திட்டத்தை தள்ளிவைத்தார் அய்யாதுரை. ஆனால், எதிர்பார்த்தபடி சிவபத்மநாபன் மாற்றப்படவில்லை; மீண்டும் அவரே மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில், அய்யாதுரை பாண்டியனின் அருமை பெருமைகளை உணர்ந்த ஈபிஎஸ் தரப்பு, தக்க சமயத்தில் அவரை அப்ரோச் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாம். டீல் ஓகே ஆனதால் அய்யாதுரை பாண்டியன் மீண்டும் அதிமுகவில் இணைய சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கும் அய்யாதுரை பாண்டியன், நாளை விஜயதசமி நாளில் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைய அதிகம் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in