ஜக்கையனை ஓபிஎஸ் பக்கம் தள்ளும் ஒக்கலிக கவுண்டர்கள்!

ஜக்கையனை ஓபிஎஸ் பக்கம் தள்ளும் ஒக்கலிக கவுண்டர்கள்!

ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரச்சினை பெரிதாக வெடிக்காத காலத்திலேயே ஓபிஎஸ்சின் தேனி மாவட்டத்தில் (கம்பம் முன்னாள் எம்எல்ஏ) எஸ்.டி.கே.ஜக்கையன் ஈபிஎஸ்சுக்கு ஆதரவாக கொடிபிடித்தார். ஜக்கையன் மகன் மணிமார்பன் தமிழகத்திலேயே முதல் ஆளாக ‘எடப்பாடியார் பேரவை’ ஆரம்பித்த வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட ஜக்கையனை ஈபிஎஸ் தரப்பு போற்றிப் பாதுகாக்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஜக்கையனை ஒதுக்கிவிட்டு தனது ஆதரவாளரான சையதுகானை கம்பத்தில் நிறுத்தினார் ஓபிஎஸ். அதற்கும் ஈபிஎஸ் தரப்பு பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. எம்எல்ஏ சீட் இல்லாது போனாலும் கட்சியில் தனக்கு முக்கியத்துவமான பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜக்கையன். அதற்கும் வழிபிறக்கவில்லை. ஆனாலும் இன்னமும் ஈபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கும் அவருக்கு, பேசாமல் ஓபிஎஸ் பக்கம் போய்விடுங்கள்; அவரை ஏன் பகைத்துக் கொள்கிறீர்கள்” என தேனிமாவட்டத்தில் இருக்கும் ஜக்கையன் சார்ந்த ஒக்கலிக கவுண்டர்கள் அழுத்தம் கொடுக்கிறார்களாம். தேனி மற்றும் கேரளத்தில் எஸ்டேட்கள் வைத்திருக்கும் ஒக்கலிக கவுண்டர்களுக்கு, கொங்கு கவுண்டர்களை மட்டுமே ஈபிஎஸ் தரப்பினர் பிரதானப்படுத்துகிறார்கள். தங்களது ஒக்கலிக கவுண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. அதை மனதில் வைத்தே ஜக்கையனின் மனதைக் கரைக்கிறார்களாம். ஆனாலும் ஜக்கையன் மதில் மேல் பூனையாகவே இருக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in