போக்சோவில் இருப்பவர் போடும் திட்டம்!

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

நாகர்கோவில் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான நாஞ்சில் முருகேசன் அதிமுக ஆட்சியிலேயே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர். ஜாமீனில் வெளியில் வந்துவிட்டாலும் இன்னும் அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. போக்சோ வழக்குப் பாய்ந்ததால் கழகத்துக்கு களங்கம் வரும் என்று அப்போதே அதிமுகவைவிட்டு நீக்கிவிட்டார்கள். அதனால் கட்சிக்குள் கோலோச்ச முடியாமல் போன முருகேசன், தனக்குப் பதிலாக தனது மகள் ஸ்ரீலிஜாவை அதிமுகவில் முன்னிலைப்படுத்தினார்.

ஆடு பகை குட்டி உறவு என்ற கதையாக முருகேசனை ஒதுக்குவதுபோல் ஒதுக்கிவைத்துவிட்டு ஸ்ரீலிஜாவை கட்சியில் இணைத்துக் கொண்ட அதிமுகவும் அவரை நாகர்கோவில் மேயர் வேட்பாளராக நிறுத்தியது. முருகேசனின் செல்வாக்கு அந்தளவுக்குப் ‘பாய்ந்தது’. தொடர்ந்து கட்சிக்காக போஸ்டர் நாளிதழ் விளம்பரம் என பணத்தை இரைத்து வரும் முருகேசன், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு அடிப்போடுகிறாராம்.

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஓபிஎஸ் பக்கம் போய்விட்டதால் ஈபிஎஸ் அணியில் அந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. முருகேசனின் கணக்கு வழக்கு இப்படி இருந்தாலும், “போக்சோ வழக்கில் இருப்பவரை எப்படி மாவட்டச் செயலாளர் ஆக்குவார்கள்?” என எதிர்முகாமில் கேள்வி எழுப்புகிறார்கள். முருகேசனின் ஆதரவாளர்களோ, “கட்சிக்கு வெளியில் இருக்கும் போதே தனது மகளை மேயர் வேட்பாளர் ஆக்கி மேஜிக் காட்டிய முருகேசனுக்கு இதற்காக இன்னொரு மேஜிக் நிகழ்த்தவா தெரியாது” என கண் சிமிட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in