பகவதி அம்மன் கோயில் விவகாரத்தில் பாட்டு வாங்கினாரா அமைச்சர்?

ஸ்டாலினுடன் மனோ தங்கராஜ்
ஸ்டாலினுடன் மனோ தங்கராஜ்

“நாங்கள் இந்து மதத்திற்கோ இந்துக்களுக்கோ விரோதமானவர்கள் இல்லை” என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது திமுக. ஆனால் குமரி மாவட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜின் செயல்பாடுகள் திமுகவை இந்து மத அபிமானிகளுக்கு அருகிலேயே நெருங்கமுடியாத அளவுக்கு கொண்டுபோய்விட்டதாக உடன்பிறப்புகளே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் புலம்பலின் உச்சம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா விவகாரத்தில் ஒலித்திருக்கிறது.

குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் மாசி மாதம் நடக்கும் கொடைவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மண்டைக்காடு, பெண்களின் சபரிமலை எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு இருமுடிகட்டி வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

1982-ல் மண்டைக்காட்டில் இந்து - கிறிஸ்தவர் மோதல் ஏற்பட்டு அது பெரும் கலவரமாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் குமரி மாவட்டடத்தில் சங்க பரிவார் அமைப்புகள் ஆழமாக வேரூன்றின. மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கும் இதுவே அடித்தளமானது.

இந்துக்களை ஓரணியில் திரளவைத்த கலவரம் நடந்த பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் இந்த ஆண்டு, மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் சில புதிய நடைமுறைகளைப் புகுத்தப் போய் அது ஆளும் திமுக அரசுக்கு எதிரான அஸ்திரமாக திரும்பியது. இதனால், திமுக தலைமையின் கண்டிப்புக்கும் மனோ உள்ளானதாகச் சொல்கிறார்கள்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவில், ‘ஹைந்தவ (இந்து) சேவா சங்கம்’ என்ற அமைப்பினர் இந்து சமய மாநாடு நடத்துவது வழக்கம். கடந்த 85 ஆண்டுகளாக இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் மாநாட்டுக்கு அழைப்பிதழ் அச்சடித்த நிலையில், மூக்கை நுழைத்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”இம்முறை இந்து சமய மாநாட்டை அறநிலையத்துறையே நடத்தும்” என அறிவித்தார்.

அவர் சொன்னபடியே அழைப்பிதழை அச்சடித்தார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். முன்னதாக ‘ஹைந்தவ சேவா சங்கம்’ தயாரித்த அழைப்பிதழில் முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி ஆகியோரின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் நீக்கிவிட்டு, சுகி சிவம், தேசமங்கையர்கரசி உள்ளிட்ட ஆன்மிகப் பேச்சாளர்களின் பெயர்களைப் போட்டு அழைப்பிதழ் தயாரித்தது அறநிலையத்துறை. இதுதான் சர்ச்சைக்கு பிள்ளையார் சுளி போட்டது.

அமைச்சர் மனோ தங்கராஜ் கோயில் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டு இந்துக்களைத் திட்டமிட்டு நசுக்குவதாக இந்து அமைப்புகள் ஓரணியில் திரண்டன. ஆனால், இதற்கெல்லாம் மனோ தங்கராஜ் அலட்டிக்கொள்ளவில்லை. அறநிலையத்துறையே சமய மாநாட்டை நடத்தும் என்பதில் உறுதியாக நின்றார். இது, இந்து விரோத இயக்கம் என திமுகவை வறுத்துக்கொண்டிருக்கும் பாஜகவினரின் வாய்களுக்கு அவல் கிடைத்த கதையாகிப் போனது. இதைவைத்து பிரச்சினையை வேறுபக்கம் திருப்பப் பார்க்கிறார்கள் என்று உளவுத்துறை அனுப்பிய அறிக்கையைப் படித்துவிட்டுப் பதறிய திமுக தலைமை, உடனடியாக மனோவை அழைத்து கண்டித்ததாகச் சொல்கிறார்கள்.

அமைச்சர் சேகர்பாபு, பொன்.ராதாகிருஷ்ணன்
அமைச்சர் சேகர்பாபு, பொன்.ராதாகிருஷ்ணன்

இதனிடையே, “நாங்கள் பாரம்பரிமாக நடத்தும் மாநாட்டை வழக்கம் போல நாங்களே நடத்துவோம்” என அறிவித்தது ‘ஹைந்தவ சேவா சங்கம்’. இதனால் மீண்டும் மண்டைக்காடு கலவரச் சூழலில் சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை நோட் போட்டது. இதனைத் தொடர்ந்தே அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை அவசர அவசரமாக மண்டைக்காட்டுக்கு அனுப்பிவைத்தார் முதல்வர் என்கிறார்கள்.

சேகர்பாபு மண்டைக்காடு பேச்சுவார்த்தைக்கு வந்த நேரத்தில் மனோ தங்கராஜ் ஈரோட்டில் இருந்தார். சேகர்பாபு வருகை குறித்து அவருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள். நாகர்கோவிலில் சுற்றுலா மாளிகையில் தனி ஆளாக பொன்னார் உள்ளிட்ட இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சேகர்பாபு. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் நிறைவில், “ஹைந்தவ சேவா சங்கமே சமய மாநாட்டை நடத்தும்” என பொன்னாரையும் சாட்சிக்கு வைத்துக்கொண்டு அறிவித்தார் சேகர்பாபு.

ஓபிஎஸ் நேர்த்திக்கடனாக கொடுத்த கொடிமரம்
ஓபிஎஸ் நேர்த்திக்கடனாக கொடுத்த கொடிமரம் கோப்புப்படம்

மண்டைக்காடு கோயில் சர்ச்சையை சுமூகமாக முடித்து வைத்ததின் பின்னணியில் துர்கா ஸ்டாலினின் தலையீடும் இருந்ததாகச் சொல்கிறார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் மீது துர்கா ஸ்டாலினுக்கும் மிகுந்த பக்தி உண்டு. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாதம் தவறாமல் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கோயிலில் இப்போதிருக்கும் கொடிமரமானது ஓபிஎஸ் நேர்த்திக்கடன் வைத்து பிரதிஷ்டை செய்தது. இந்தக் கொடிமர பிரதிஷ்டைக்கு மறுநாள் தான் தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ்.

ஸ்டாலினுடன் குமரி மாவட்டத்துக்கு வரும்போதெல்லாம் துர்கா ஸ்டாலின் மண்டைக்காடு பகவதி அம்மனை தட்டாமல் தரிசித்து விடுவார். இம்முறை திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் கோயிலின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. உடனே இங்கு கிளம்பிவந்த அமைச்சர் சேகர்பாபு இங்கேயே தங்கியிருந்து கூரை புனரமைப்பு பணிகளை கவனித்தார். தற்போது இந்தக் கோயிலை முன்வைத்து கிளம்பிய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு, கோயிலுக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் உள்ள பந்தமும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

காளியப்பன்
காளியப்பன்

இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் காளியப்பனிடம் பேசினோம். “இது சர்வமத நல்லிணக்க மாநாடு அல்ல. இந்து சமய மாநாடு. இந்த மாவட்டத்தில் இதற்கு முன்பும் லாரன்ஸ், ராஜேந்திர பிரசாத் என கிறிஸ்தவ அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத மத காழ்ப்புணர்ச்சி மனோ தங்கராஜ்க்கு இருக்கிறது. தக்கலை காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய குமாரகோயில் வேலிமலை முருகனுக்கு ஆண்டு தோறும் காவடிக்கட்டு நடக்கும். இம்முறை அதற்கு தடைபோட்டார் மனோ. இந்து இயக்கங்கள் மொத்தமாக திரண்ட பின்பு வேறு வழியின்றி அனுமதித்தார். மண்டைக்காட்டில் பெளர்ணமி விளக்குப் பூஜையை காலம் காலமாக பக்தர்கள் நடத்திவந்தனர். அதையும் பறித்து அறநிலையத்துறை வசம் கொடுக்க அடித்தளமிட்டார்.

குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்ட நிகழ்வுக்கு வடம் பிடிக்க வந்த மனோ தங்கராஜ், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்களை தன்னோடு அழைத்து வந்தார். இப்படி ஆன்மிக சிந்தனையே துளியும் இல்லாத மனோ தங்கராஜ், எதற்காக அறநிலையத்துறை கோயில் விஷயங்களில் தலையிட்டு விளையாடுகிறார்?

‘ஹைந்தவ சேவா சங்கம்’ நடத்தும் மாநாட்டுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்திலேயே 4 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார்கள். அத்தனை பாரம்பரியம் மிக்கது. குமரி மாவட்டத்தில் இந்து உணர்வாளர்கள் கோயில் திருவிழாக்களிலும் அதனை ஒட்டிய கலாச்சார நிகழ்வுகளிலும் ஒன்றாக இணைகின்றனர். அதை நசுக்க வேண்டும் என நினைக்கிறார் மனோ. அதற்காக இந்துக் கோயில்களுக்குள் அறநிலையத்துறை மூலம் புகுந்து இந்துக்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் நெருக்கடி கொடுத்து கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயரெடுக்க பார்க்கிறார்” என்றார் அவர்.

அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பினரோ, “குமரி மாவட்டத்தில் கடந்த 18 மாதங்களில் அமைச்சர் மனோ தங்கராஜின் முயற்சியால் தான் பல்வேறு கோயில்களின் குடமுழுக்கு விழாக்களுக்காக நூறு கோடி ஒதுக்கப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 425 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடக்கவும் அவரே காரணமாக இருந்தார். அமைச்சர் என்ற முறையில் அவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை கிறிஸ்தவர் என்னும் கூட்டுக்குள் எப்படி அடைக்கமுடியும்? அறநிலையத்துறை கோயில் விழாக்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கிவைப்பது தான் நடைமுறை. அதைத்தான் மனோ தங்கராஜும் செய்கிறார். ஆனால், அதிலும் பாஜக அரசியல் செய்கிறதே என்ன செய்ய?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அனைவருக்கும் பொதுவான மனிதராகக் காட்டிக்கொண்டு மனோ தங்கராஜ் நல்லதே செய்ய நினைத்தாலும் எதையாவது சொல்லி அவரை வம்புக்கு இழுக்கவும் சிலர் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டுமானால் இந்து கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று விலகி இருப்பதுதான் அவருக்கும் நல்லது ஆளும் அரசுக்கும் நல்லது என்று தோன்றுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in