`செந்தில் பாலாஜியிடம் 40 எம்எல்ஏக்கள்; தமிழகத்தில் விரைவில் மகாராஷ்டிரா நிலைதான்'- சொல்கிறார் இந்து முன்னணி தலைவர்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்

``தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும். ஏனென்றால் செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ.களின் ஆதரவை வைத்துள்ளார்'' என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மதுரை மாநகர இந்து முன்னணி சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் பிரச்சார பயண பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில நிர்வாகிகள், மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், "தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ அப்போது தான் அவரை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம். அதுவரை அவரை, நாங்கள் ஆளுநரின் ஆலோசகர் என அழைப்போம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும். ஏனென்றால், செந்தில் பாலாஜி 40 எம்.எல்.ஏ.களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் கூறுகிறது. தமிழக அரசியல் விரைவில், தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது.

மன்னார்குடி ஜீயர், கோவில்களின் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், நானே அகற்றுவேன் என கூறிய அவரது தைரியத்தை இந்து முன்னணி வரவேற்கிறது. அவருக்கு இந்து முன்னணி துணை நிற்கும். இஸ்லாமிய பெண்கள் பர்தா போடுவதை அவர்களே விரும்பவில்லை. ஆகவே, அவர்களுக்கு பர்தாவிலிருந்து சுதந்திரம் தர வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in