
ஆண்டி கோலத்தில் சென்று கோரிக்கை மனு அளிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மலைக்கோட்டை தர்மர் மற்றும் சிலர் இன்று வந்தனர். அப்போது, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும், பசுவதைத் தடை மற்றும் மதமாற்றத் தடைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், பழனி மலைக்கோயிலில் ஆண்டி அலங்காரத்தை தவிர மற்ற அலங்காரங்கள் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி மொட்டை அடித்து ஆண்டிக்கோலத்தில் மலைக்கோயிலுக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை எழுதி உண்டியலில் போடப்போவதாக தெரிவித்தனர்.
இது குறித்து, தகவலறிந்த பழனி நகர காவல்துறையினர் மலைக்கோயிலுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், தடையை மீறி ஆண்டிக் கோலத்தில் சென்றால் கைது செய்துவிடுவோம் என்றும் காவல்துறையினர் எச்சரித்தனர். தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆண்டிக் கோலத்தைத் தவிர்த்து மொட்டையடித்துக் கடிதத்துடன் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்யவும், அவர்களது கோரிக்கைகளை உண்டியலில் செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அடிவாரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.