இந்தி தின கொண்டாட்டம்: உள்ளூர் மொழிகளின் வளர்ச்சி பற்றி அமித்ஷா அதிரடி கருத்து

விழாவில் உரையாற்றும் அமித் ஷா
விழாவில் உரையாற்றும் அமித் ஷா

இன்று இந்தி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழியானது ஒட்டுமொத்த தேசத்தையும் ஒற்றுமையின் இழையில் இணைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சபையால் 1949ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பின் மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி திவாஸ் அல்லது தேசிய இந்தி தினம் கொண்டாட முடிவு செய்தார்.

இந்தி உலகில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழி ஆகும். இந்தியா தவிர மொரிஷியஸ், பிஜி, சுரினாம், கயானா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பிற நாடுகளிலும் இந்தி அதிகளவில் பேசப்படுகிறது. இந்நாளில் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடுகின்றன.

இந்தி திவாஸ் கொண்டாட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்திந்திய அலுவல் மொழி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “அதிகாரப்பூர்வ மொழி இந்தி தேசத்தை ஒற்றுமையின் இழையில் ஒருங்கிணைக்கிறது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். இந்தி உட்பட அனைத்து உள்ளூர் மொழிகளின் இணையான வளர்ச்சிக்கு மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தி மொழியை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு பங்களித்த மாபெரும் ஆளுமைகளுக்கு எனது வணக்கம். அனைவருக்கும் ‘இந்தி திவாஸ்' நல்வாழ்த்துக்கள்" என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in