பிரியங்கா காந்தி சூறாவளி பரப்புரை: இமாசல பிரதேசத்தில் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம்!

வாராணசி பேரணியில் பிரியங்கா
வாராணசி பேரணியில் பிரியங்கா

இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இமாசல பிரதேசத்தில் நவம்பர் 10 ம் தேதி வரை மண்டி, குலு, காங்க்ரா, சம்பா, ஹமிர்பூர், உனா, சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய இடங்களில் எட்டு பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 3 ம் தேதி காங்க்ரா மற்றும் சம்பாவிற்கும், நவம்பர் 7 ம் தேதி ஹமிர்பூர் மற்றும் உனாவிற்கும் செல்வதற்கு முன், அவர் அக்டோபர் 31 ம் தேதி மண்டி மற்றும் குலுவில் நடக்கும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார். நவம்பர் 10 ம் தேதி அவர் சிம்லா மற்றும் சிர்மூரில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ள இமாச்சல பிரதேச தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி இமாசலில் ஆட்சியை தக்கவைக்க முயற்சிக்கிறது.

கடந்த அக்டோபர் 14 ம் தேதி பிரியங்கா காந்தி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும், 1,00,000 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், இளைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்தார்.

தேர்தலில் போட்டியிடும் 68 வேட்பாளர்களில் 63 பேரின் பெயர்களை காங்கிரஸ் இதுவரை அறிவித்துள்ளது. 62 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜகவும் வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சார பேரணிகளில் உரையாற்றியுள்ளனர். ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரையில் இருக்கும் நிலையில், பிரியங்கா காந்தி இமாசலில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in