மோடி- அமித்ஷா
மோடி- அமித்ஷாhindu

பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் - கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர்: பரபரப்பு கிளப்பும் பாஜகவின் தேர்தல் அறிக்கை!

இமாசல பிரதேசத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவால் இமாசல பிரதேசத்துக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள்கள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்றும், ஐந்து புதிய மருத்துவப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

மேலும், ஐந்தாண்டுகளில் 8 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என்றும், மாநிலத்தின் முக்கியப் பயிரான ஆப்பிள்களின் பேக்கேஜிங்கின் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 12 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளது. அதுபோல இமாசல பிரதேசத்தில் உள்ள வக்ஃப் வாரிய சொத்துக்கள், மதம் அல்லது பொதுநலப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட இஸ்லாமிய எஸ்டேட்கள் போன்றவற்றை சரிபார்க்க கணக்கெடுப்புகளுக்கும் உறுதியளித்துள்ளது. செப்டம்பரில் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, மக்களை துருவமுனைக்கும் நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.

மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், பாஜகவே தனது தேர்தல் வாக்குறுதியில் இலவச மிதிவண்டி, ஸ்கூட்டர் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

68 உறுப்பினர்களைக் கொண்ட இமாசல பிரதேச சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in