இமாசல பிரதேச பாஜக தலைவர்கள் ஆஆக-வுக்குத் தாவுவது ஏன்?

இமாசல பிரதேச பாஜக தலைவர்கள் ஆஆக-வுக்குத் தாவுவது ஏன்?

சமீபகால அரசியல் போக்குகளில், பாஜக பிற கட்சிகளிலிருந்து தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. மேற்கு வங்கம் தொடங்கி தமிழகம் வரை இதைச் செயல்படுத்திப் பார்க்க பாஜக தயங்குவதே இல்லை. ஆனால், அப்படிப்பட்ட பாஜகவுக்கே ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

ஆம், இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இமாசல பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஹர்மல் திமான் உட்பட 3 பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் பலரும் ஆம் ஆத்மி கட்சிக்கு அணி மாறிவிட்டார்கள்.

இமாசல பிரதேச பாஜகவில் 30 வருடங்களாக அங்கம் வகித்த ஹர்மல் திமான், டெல்லியில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முன்னிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். பாஜகவின் பட்டியலினப் பிரிவு தேசியச் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்த அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பாஜகவின் கொள்கைகளால் வெறுப்படைந்திருப்பதால் ஆம் ஆத்மி கட்சிக்குச் செல்வதாக ஹர்மல் திமான் காரணம் கூறியிருக்கிறார். தேவராஜ், ஜக்தீஷ் பவார் ஆகிய முக்கியத் தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யேந்திர ஜெயின், “இமாசல பிரதேசத்தில் இன்னும் பல பாஜக தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் இணைந்திருக்கும் மூன்று தலைவர்களும் பாஜகவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்கள். அது மட்டுமல்ல, பாஜகவிலிருந்து குறைந்தபட்சம் 1,000 பேர் ஆம் ஆத்மி கட்சிக்கு வரவிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

பஞ்சாப் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி இமாசல பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதற்கான ஏற்பாடுகளில் மும்முரம் காட்டுவது குறிப்பிடத்தக்கது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in