ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஆபத்து!

கலவரக் களமாகிப்போன கர்நாடகம்
ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஆபத்து!

முஸ்லிம் பெண்கள் வழக்கமாகத் தலையில் அணியக்கூடிய ஹிஜாப் எனும் மேலாடையை முகாந்தரமாக வைத்து, அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் கல்விக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியும் என்பதை, கடந்த சில நாட்களாக நடந்துவரும் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன. இந்த விவகாரம் நாடு முழுதும் ஒருவிதமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது என்றால், தமிழ்நாட்டில் வேறுவிதமான கருத்து மோதல்கள் நடந்துவருகின்றன.

சிறுபான்மையினரின் உரிமைகளுக்குக் குரல் எழுப்பும் முற்போக்காளர்கள்கூட, இந்த விவகாரத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று வாதிடுவதைக் காணமுடிகிறது. பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணிய நிலைப்பாட்டில் ஹிஜாபை ஆதரிப்பது சரியா, தவறா என்கிற குழப்பமும் ஒரு பக்கம் சிலருக்கு எழுந்துள்ளது. அதேபோன்று மிதவாதிகளாக இருக்க முயல்பவர்கள், “அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டால் பதிலுக்கு ‘அல்லாஹுஅக்பர்’ என்று கோஷமிடுவதேன், ‘ஜெய்பீம்’ என்று முழங்குவதேன். இதன் மூலம் கலவரக்காரர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்” என்கிறார்கள்.

இதுபோக, சீருடை என்பதே அனைவரும் ஒன்றுபோல இருக்கத்தானே. பிறகு மத அடையாளங்கள் வேற்றுமையை அல்லவா விதைக்கின்றன என்ற மனக் குழப்பமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ‘காவித் துண்டு அணிந்து வருவது தவறெனில், ஹிஜாபும் தவறுதானே’ என்கிற கேள்வியையும் அவர்கள் எழுப்பத் தவறவில்லை.

நேர்மறை சமயச்சார்பின்மை

கர்நாடகா மாநிலம், உடுப்பியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை கல்லூரி நுழைவாயிலில் கடந்த டிசம்பர் மாதம் தடுத்து நிறுத்தி, ஹிஜாபை அவிழ்க்கும்படி கட்டளையிட்டதில் தொடங்கியது இந்தப் பிரச்சினை. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் சிக்மகளூர், மாண்டியா, குந்தபுரம், ஷிமோகா ஆகிய பகுதிகளிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்குள் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது.

மேற்கத்திய நாடுகளைப் போல, சமயத்துக்கும் பொதுச் சமூகத்துக்கும் தொடர்பில்லை என்ற நிலைப்பாடு இந்தியாவில் கிடையாது. நேர்மறை சமயச்சார்பின்மையை இந்தியா கடைபிடிக்கிறது என்கிறது அரசமைப்பு. இதன்படி, அவரவர் சமய நம்பிக்கைகளின்படி சில அடையாளங்களைத் தாங்கி வருவது அனுமதிக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த விவகாரத்தை கிளப்பிய உடுப்பி பந்தஸ்கார் கல்லூரி வெளியிட்டிருக்கும் 2020-21 ஆண்டுக்கான விதி புத்தகத்தில்கூட, தங்களது கல்லூரியின் சீருடையுடன் ஒத்துப்போகும் நிறத்தில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி உண்டு என்றே அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை, வீடியோ ஆதாரத்துடன் கர்நாடகா பத்திரிகையாளர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு?

ஆனால், இப்போது அந்தக் கல்லூரி நிர்வாகம் இதற்கான ஆதாரங்களை மறைக்க முயல்கிறது. கல்லூரியைச் சொல்லிக் குற்றமில்லை. வெளியிலிருந்து தங்களுக்கு வந்த கட்டளையை அவர்கள் நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழ்நாட்டில் எப்படியோ என்று நீங்கள் யோசித்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் திருவாரூரைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், பள்ளிச் சீருடையில் சமய அடையாளம் குறித்துத் தெளிவுவேண்டி 2013-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருடைய கோரிக்கைக்கு பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகம் அளித்த விளக்கம், தெளிவான புரிதலுக்கு உதவும்.

சமய அடையாளங்களை அனுமதிக்கும் தமிழக கல்வித் துறை
சமய அடையாளங்களை அனுமதிக்கும் தமிழக கல்வித் துறை

‘தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து வகை கல்வி நிலையங்களிலும் பயிலும் மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சீருடையுடன் தனி மத அடையாளங்களை அணிந்து செல்வதற்கு தமிழக கல்வித் துறை தடை ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அப்படி அணிந்து செல்லலாம்... இஸ்லாமிய மாணவர் தலையில் தொப்பியும், முகத்தில் தாடியும் மற்றும் இஸ்லாமிய மாணவியர் தங்கள் தலையில் ஹிஜாப் என்னும் மேலாடை அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு தமிழ்நாடு அரசு கல்வித் துறை தடை ஏதும் விதிக்கவில்லை’ என்று அழுத்தந்திருத்தமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தமிழ்நாட்டுடன் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமா என்றால், சில தினங்களுக்கு முன்பு, புர்கா அணிந்து வகுப்பறையில் அமர மாணவி ஒருவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி அனுமதி மறுத்தது. புதுச்சேரிக்குள் நுழைந்த சிக்கல் தமிழகத்துக்குள் எட்டிப்பார்க்க வெகுநேரம் ஆகாது!

ஹிஜாப் சமூக ஒழுங்கை பாதிக்குமா?

இதற்கிடையில், சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆடைகளை கல்லூரி மாணவ/மாணவியர் உடுத்தக்கூடாது என கர்நாடக அரசு அறிவித்தது. ஹிஜாப் தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மாணவிகள் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் காமத் வாதிடும்போது, “ஹிஜாப் எனும் மேலாடை எப்படி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முடியும்?” என்று எழுப்பிய கேள்வி, இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வழக்கின் விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கும் நீதிமன்றம், மாணவ - மாணவியர் ஹிஜாப் மற்றும் காவித் துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடையும் விதித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.கொடியும் மூவர்ண தேசியக் கொடியும்
ஆர்.எஸ்.எஸ்.கொடியும் மூவர்ண தேசியக் கொடியும்

காவி யாருடைய அடையாளம்?

‘காவித் துண்டு அணிந்து வருவது தவறென்றால், ஹிஜாப் அணிவதை மட்டும் ஏற்பதா’ என்கிற வாதத்தையும் முன்வைக்கும் சிலர், “திருக்குர்ஆன் 24.31 மற்றும் 24.33 வசனங்கள் முஸ்லிம் பெண்கள் தங்களது தலைப்பகுதியை மறைப்பது அவசியம் என்கிறது. ஆனால், காவித் துண்டு இந்துக்களின் அடையாளம் என்பதற்கான ஆதாரம் எங்கே உள்ளது? இந்து மதம் என்ற பொது வகைமையைக் கண்டுபிடித்ததே ஆங்கிலேயர்தானே. அப்படிப் பார்த்தால், ’காவி’ நிறம் என்பது இந்துத்துவத்தின் அடையாளம் என்பதே வரலாறு. நாடு சுதந்திரம் அடையும்போது மூவர்ணக் கொடிக்குப் பதில் காவிக் கொடிதான் தேசியக் கொடியாக ஏற்றப்பட வேண்டும் என்று வலுவாக வாதிட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ். இதன் நீட்சியாகவே, இப்போது கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் காவி உடை அணிந்த மாணவர் ஒருவர் தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடி ஏற்றிய சம்பவம் நடந்திருக்கிறது” என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் முன்வைக்கும் புகாரும் கேள்வியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகி இருக்கிறது. ‘கடந்த சில நாட்களில் குஜராத்தின் சூரத் நகரிலிருந்து 50 லட்சம் காவித் துண்டுகள் கர்நாடகாவுக்காக வாங்கப்பட்டிருப்பதாக’ அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும் அவர், “அத்தனை காவித் துண்டுகளும் இரவோடு இரவாக எப்படி மாணவர்களிடம் விநியோகிக்கப்பட்டன?” என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இதனிடையே, இந்துத்துவ அமைப்பினர் சிலர் கல்லூரி மாணவர்களிடம் காவித் துண்டுகளை விநியோகித்து கலவரம் செய்யத் தூண்டும் வீடியோவும் அம்பலமானது.

இந்த விவகாரத்தில், ’ஜெய்பீம்’ என்றும் ’அல்லாஹு அக்பர்’ என்றும் மாணவி முஸ்கான் முழங்கியது சரியா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மாணவி முஸ்கான் ஒன்றும் ’அல்லாஹு அக்பர்’ என்று முழங்கியபடி கல்லூரிக்குள் நுழையவில்லை. அவரை அச்சுறுத்தும் தொனியில் மாணவர் கூட்டம் ஒன்று ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டு அவரை நோக்கி ஓடிவருகிறது. அங்கு தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுக்க, அந்தச் சிறு பெண் உணர்வுபூர்வமாகத் தள்ளப்பட்டாள்; அவ்வளவே! அதே நேரம், “உங்களை பதற்றம்கொள்ளச் செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் தருகிறீர்களா?” என்று என்டிடிவி செய்தியாளர் கேட்டபோது, “இனி அவர்கள் இப்படி செய்யாதிருந்தால் போதும்...” என்று பெருந்தன்மையுடன் நிதானமாகவே பதிலளித்தார் முஸ்கான்.

ஹிஜாப் அணிந்திருக்கும் மலாலா
ஹிஜாப் அணிந்திருக்கும் மலாலா

அமைதிக்கான நோபல் பரிசாளர் மலாலா சுட்டிக்காட்டியதுபோல, “பெண்கள் எப்போதுமே பண்டமாகவே பார்க்கப்படுகிறார்கள். கூடுதலாக அணிந்தாலும் சிக்கல், குறைவாக அணிந்தாலும் சிக்கலா” என்ற அவரது கேள்வியும் இங்கு தொக்கி நிற்கிறது. புர்கா, ஹிஜாப் போன்ற ஆடைகள் முஸ்லிம் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற பெண்ணியவாதிகளின் வாதம் நியாயமானது. ஆனால், ஆடை என்பது தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்டது. அதை அவரவர் தீர்மானிக்கட்டும். அதுவே, கல்வி அடிப்படை உரிமை.

கல்வியா அல்லது ஹிஜாபா என்ற நெருக்கடியை, முஸ்லிம் பெண் குழந்தைகள் மீது திணிப்பது சமூக அநீதி. அரசமைப்பின்படி தலைமைப் பொறுப்பிலிருக்கும் அரசு, இதை உணர்ந்து செயல்பட வேண்டும். “பிறந்ததிலிருந்து 19 வயது வரை இந்த ஆடையை அணிந்து பழகிவிட்டேன். எனது கல்லூரி வாசலிலேயே நிறுத்தப்பட்டு ஹிஜாபை அவிழ்க்கும்படி கட்டளையிடப்பட்டபோதுதான் முதல்முறையாக நான் முஸ்லிம் என உணர வைக்கப்பட்டேன்” என்று, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் கூறியிருப்பது கவலைக்குரியது. அவர்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அல்ல... அவர்கள் மாணவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை அழகு. ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஆபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in