“கர்நாடகா கலக்கத்தைத் தூண்டுகிறது; தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக்கூடாது” -எச்சரிக்கும் கமல்ஹாசன்

மநீம தலைவர் கமல்ஹசான்
மநீம தலைவர் கமல்ஹசான்hindu கோப்பு படம்

“கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக்கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசான் எச்சரித்துள்ளார்.

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதேபோல், மாநிலம் முழுதும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவித் துண்டை அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கினார்கள்.

இதனிடையே, கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்துதான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே, மாநிலம் முழுதும் பதற்றம் நிலவுவதால் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்று எச்சரித்துள்ளார் கமல்ஹாசன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in