இன்னும் 7 மாதத்தில் 12,525 கிராமங்களுக்கு அதிகவேக இணைய சேவை: அமைச்சர் மகிழ்ச்சியான செய்தி

அமைச்சர் மனோதங்கராஜ்
அமைச்சர் மனோதங்கராஜ் இன்னும் 7 மாதத்தில் 12,525 கிராமங்களுக்கு அதிகவேக இணைய சேவை: அமைச்சர் மகிழ்ச்சியான செய்தி

``பிராட்பேண்ட் சேவை வழங்கும் திட்டம் இன்னும் 7 மாதங்களில் நிறைவடையும். அப்போது தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களுக்கு அதிகவேக இணைய சேவை கிடைக்கும்" என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் யுமெகைன் கேட்லிஸ்ட்-23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கி பேசுகையில், "தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நோக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் அவர்களின் திறமையான பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எல்காட் மூலம் வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாட்டை ஐ.டி. துறையின் அதிகார மையமாக காண்பிக்க யுமெகைன் சென்னை என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இதுதொடர்பாக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பல வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபட்டிக்ஸ், ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஐ.டி. துறையில் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 25 லட்சம் திறன் மிக்க பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும்.

பிராட்பேண்ட் சேவை வழங்கும் திட்டம் இன்னும் 7 மாதங்களில் நிறைவடையும். அப்போது தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமங்களுக்கு அதிகவேக இணைய சேவை கிடைக்கும். சாதாரண மக்களையும், அரசையும் இணைக்கும் தொழில்நுட்பம். தமிழ்நாடு அரசின் 235 திட்டங்களை இ-சேவை வழியாக பெறலாம். இன்னும் 40 திட்டங்கள் இ-சேவை மையம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-அலுவலகம் மூலம் அரசு அலுவலகங்களுக்கிடையே கோப்புகள் பரிமாற்றம் எளிதாக செய்யலாம்" என்றார்.

இதில் கலெக்டர் கிராந்திகுமார், தனியார் கல்வி நிறுவனங்கள் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன், ஸ்டார்அப் தமிழ்நாடு ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், அலுவலர்கள் ராகுல், சுகன்யா, பிட்ஸ்கிரன்ச் நிறுவனர் விஜய் பிரவீன், பயோப்யூல் தலைமை செயல் அலுவலர் கிஷன் கருணாகரன், கல்லூரி முதல்வர் அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in