பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை தொடுத்த வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் தடை

பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை தொடுத்த வழக்கு: காவல் துறைக்கு ஐகோர்ட் தடை

நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் ‘சினேகம்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். சினேகம் அறக்கட்டளைக்கு எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து நடிகையும், பாஜக மகளிர் அணி மாநிலத் துணைத்தலைவருமான ஜெயலட்சுமி மோசடி செய்ததாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தம் மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியாக கூறி சினேகன் மீது ஜெயலட்சுமி புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்குத் தடை விதித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in