
மதுரையில் நாளை மறுதினம்(ஆக.20) நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடைவிதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்து விட்டது. இதனால் அதிமுகவினர் நிம்மதியடைந்துள்ளனர்.
மதுரையில் அதிமுக பொன்விழா வீரவரலாறு மாநாடு நடத்த உள்ளது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) அன்று நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
சேதுமுத்துராமலிங்கம் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், அதிமுக மாநாட்டிற்கு பெருமளவு கூட்டம் வரும் என்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் எனவும், மாநாடு நடைபெறும் பகுதியில் விமான நிலையம் அமைந்திருக்கும் நிலையில் மாநாடு நடத்த விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில், மாநாட்டின் போது வெடி மற்றும் பட்டாசு வெடிக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எப்படி வழங்குவது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது என அறிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். உயர் நீதிமன்றத்தின் இந்த அனுமதியினால் அதிமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.