எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு நடைபெற்ற டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதே கோரிக்கையை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை, எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பதியப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த ஜூலை 1-ம் தேதி நடைபெற்றது. அப்போது டெல்லியிலிருந்து முத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகி இருந்தார். அவர் மத்திய அரசின் வருமான வரித்துறையை சேர்ந்த வழக்கறிஞர் என்பதால் அவர் எப்படி ஆஜராகலாம் எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆட்சேபனை தெரிவித்தார். வேலுமணி தொடர்பான வழக்கில் தனி நீதிபதி மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி அமர்வே விசாணை செய்யும் எனவும், வேலுமணி தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பான விசாரணையைச் செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in