'அந்த 4 நடிகைகளிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும்’: கடுமையான உத்தரவுகளுடன் சைதை சாதிக்கிற்கு ஜாமீன்

'அந்த 4 நடிகைகளிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும்’: கடுமையான உத்தரவுகளுடன் சைதை சாதிக்கிற்கு ஜாமீன்

பாஜக நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு வழக்கில் சைதை சாதிக் அந்த நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையிலேயே அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், திமுக எம்.பி கனிமொழி உடனடியாக மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்  எனத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி சைதை சாதிக் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளை சைதை சாதிக் பேசியிருக்கிறார். அதனால் இனிமேல் அதுபோல பேச மாட்டேன் என்று அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.  மேலும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை 29-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை சைதை சாதிக்கை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in