
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவ.28-ம் தேதி வாதங்களைத் தொடங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம் தென்னரசு. இவர் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த திமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். அப்போது 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2012 பிப்ரவரி 14-ம் தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு அவரின் மனைவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தாமாக முன்வந்து எடுத்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மேல்முறையீடு தொடர்பாக விவரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். அதுமட்டுமின்றி வழக்கின் வாதங்களைத் தொடங்க அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!