கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும்... ஓபிஎஸ் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி!

கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும்... ஓபிஎஸ் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பொதுக்குழு நடைபெறாமலேயே போனது. இந்நிலையில் மீண்டும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் எனத் தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இந்நிலையில் பொதுக்குழுவிற்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓபிஎஸ். இது குறித்து நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “பொதுக்குழுக் கூட்டத்துக்கு அதிமுக சட்ட விதிப்படி 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்கவில்லை. உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த 7-ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா, பொதுக்குழுவை நடத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது. எத்தனை நாளுக்குள் அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்பினருக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 8-ம் தேதியும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை. கட்சி விதிகளைத் திருத்தம் செய்யத் தொண்டர்களை அழைக்கும் உரிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது” எனக் கூறப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி விதிகளில் திருத்தம் செய்த தீர்மானத்தை முன்வைக்காத நிலையில் கட்சி பதவிகள் எப்படி காலியாகும்? கட்சியின் நலன் கருதியே வழக்கு தொடரப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

எப்படியும் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்தது. பொதுக்குழுவில் போலியான அடையாள அட்டையை தவிர்க்கும் விதமாக அதி நவீன வசதிகளுடன் பொதுக்குழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஈபிஎஸ் சென்றார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். இந்த நிலையில் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. மேலும் பதற்றத்தைத் தவிர்க்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழலில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி சென்னை உயர் நீதிமன்ற பகுதியிலும் அதிமுகவினர் குவிந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தார். “பொதுக்குழு நடைபெறுவதற்கு எவ்வித தடையும் இல்லை. அதிமுகவின் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும்” என தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in