‘திரும்பிச் செல்லுங்கள் சிதம்பரம்’ - திகைக்க வைத்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்!

‘திரும்பிச் செல்லுங்கள் சிதம்பரம்’ - திகைக்க வைத்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்!

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் தொடர்ந்த ஒரு வழக்கில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று ஆஜரானார். அப்போது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அவரை முற்றுகையிட்டு முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவரும் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான அதிர் ரஞ்சன் சவுத்ரி. மம்தா பானர்ஜியுடன் ஆரம்பம் முதலே மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் அதிர் ரஞ்சன், 2019-ல் மம்தா பானர்ஜி அரசு அரசு நிறுவனமான மெட்ரோ டெய்ரியின் பங்குகளை கெவென்டர் எனும் தனியார் நிறுவனத்துக்கு விற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆதரவு வழக்கறிஞர்களும், அக்கட்சியின் சட்டப் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அந்நிறுவனத்துக்கு ஆதரவாக ஆஜராக வந்த ப.சிதம்பரத்தைச் சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர்.

“உங்களைப் போன்ற தலைவர்களால்தான் காங்கிரஸ் கட்சிக்குச் சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்று சத்தமிட்ட அவர்கள், “திரும்பிச் செல்லுங்கள் சிதம்பரம்” என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து மவுனமாக நடந்து சென்ற ப.சிதம்பரம் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

மம்தா அரசின் இந்த நடவடிக்கையால் மேற்கு வங்கத்தின் நலனுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஏற்கெனவே கெவென்டர் நிறுவனம் அந்தப் பங்குகளை ஒரு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாகவும் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் வழக்கறிஞர் பிகாஷ் பட்டாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த ப.சிதம்பரம், “இது ஒரு சுதந்திர நாடு. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நான் ஏன் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்?” என்று கேட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in