
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக பாஜக எம்.எல்.ஏ விருபக்சப்பா கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்தார். அவருக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஊர் திரும்பிய எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் சன்னகிரியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மடல் விருபக்சப்பா, கர்நாடக சோப்ஸ் அண்ட் ஷவர்ஜென்ட்ஸ் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்) நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அந்த நிறுவனத்துக்கு மூலப்பொருட்களை வழங்குவதற்கான டெண்டருக்காக விருபக்சப்பாவின் மகன் பிரசாந்த் மடல், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது, இதன் மதிப்பு 8 கோடிக்கும் அதிகமாகும்.
இந்த விவகாரத்தில் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விருபக்சப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கே.எஸ்.டி.எல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்னர் அவரை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன, ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் காணாமல் போனபோது, இளைஞர் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் " விருபக்சப்பாவை காணவில்லை" என சுவரொட்டிகளை ஒட்டியது. இந்த நிலையில் அவருக்கு இன்று இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.