‘பழங்குடியின முதல்வரான என்னை துன்புறுத்த சதி’ - பாஜக மீது பாயும் ஹேமந்த் சோரன்

‘பழங்குடியின முதல்வரான என்னை துன்புறுத்த சதி’ - பாஜக மீது பாயும் ஹேமந்த் சோரன்

அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பியிருப்பது, மத்திய ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தி பழங்குடியின முதல்வரான தன்னை துன்புறுத்துவதற்கான சதி என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் நடந்ததாகக் கூறப்படும் சுரங்க ஊழல் தொடர்பான பணமோசடி விசாரணையில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு முதல்வர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று கடுமையாக சாடினார். கட்சியின் பெயரை குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சரை துன்புறுத்துவதற்கு அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் மனநிலை. பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைத் தடுப்பதே என்னை துன்புறுத்துவதற்கான நோக்கமாகும். அவர்களின் சதிகள் எதுவும் வெற்றிபெற போவதில்லை. மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் நான் வெற்றி பெறுவேன். நம் முன்னோர்கள் நமக்கு தோல்வியைக் கற்றுத்தரவில்லை, அவர்கள் போராடி வெல்ல கற்றுக் கொடுத்தார்கள்" என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, அமலாக்கத்துறை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதைக் காட்டும் முயற்சியாகும். ஒவ்வொரு சதிக்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே முதலமைச்சரின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜூலை மாதம் அமலாக்கத்துறை நடத்திய மாநிலம் தழுவிய சோதனைகளில், பங்கஜ் மிஸ்ராவின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.11.88 கோடி கைப்பற்றப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது வீட்டில் ரூ.5.34 கோடி கணக்கில் வராத பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஹேமந்த் சோரனின் பாஸ்புக் மற்றும் அவர் கையெழுத்திட்ட சில காசோலைகளையும் அமலாக்கத்துறை கைப்பற்றியது.

2021ம் ஆண்டு சுரங்க குத்தகையை தனக்கே ஒதுக்கீடு செய்துகொண்டதன் மூலம் தேர்தல் விதிகளை மீறியதாக பா.ஜ.க புகார் அளித்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரனை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த இரு மாதங்களாகவே ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in