தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ’’தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்’’ என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.