மதுரை மேயர் ரேஸ்... முந்துவது யார்?

இந்திராணி பொன்வசந்துக்காகப் பிரச்சாரம் செய்யும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
இந்திராணி பொன்வசந்துக்காகப் பிரச்சாரம் செய்யும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வும் எழுதி, நீட் தேர்வும் எழுத வேண்டியதிருப்பதைப் போலவே, மாநகராட்சித் தேர்தலில் மேயர் தேர்வு முறை இருக்கிறது. ஆனாலும், மேயராவதே லட்சியம் என்று கவுன்சிலராகும் முன்பே கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள் வேட்பாளர்கள்.

மதுரையில் திமுகதான் மேயர் பதவியைக் கைப்பற்றும் என்று சொல்லப்பட்டாலும்கூட, கட்சி சார்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக யாரும் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மேயர் பதவிக்குப் பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களில், பொம்மத்தேவனின் மகள் ரோகிணி, கட்சியின் மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜயமவுசி பொன்.சேதுராமலிங்கம், அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளரான திருப்பாலை சசிக்குமாரின் மனைவி வாசுகி, மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதியின் உறவினர் இந்திரா காந்தி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 விஜயமவுசி, வாசுகி சசிக்குமார் (திமுக)
விஜயமவுசி, வாசுகி சசிக்குமார் (திமுக)

இந்த 5 பேரில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணியும், பலமும், பலவீனமும் இருக்கிறது. ஆனையூர் தனி நகராட்சியாக இருந்தபோது, அதன் கவுன்சிலராக இருந்தவரும், இப்போது அந்தப் பகுதியின் திமுக பகுதிச் செயலாளராக இருப்பவருமான பொம்மத்தேவனின் மகள்தான் ரோகிணி. அதைவிட முக்கியமான தகுதி, பொம்மத்தேவன் அமைச்சர் பி.மூர்த்தியின் பினாமி என்று கருதப்படுபவர். ரியல் எஸ்டேட் தொழில், கல் குவாரி, கிரஷர் எல்லாவற்றையுமே இவர் பெயரில்தான் நடத்துகிறார் அமைச்சர் என்கிறார்கள். இவரது மனைவியை மேயராக்கிவிட்டால், மதுரையின் ஆக்டிங் மேயராகவும் தானே இருக்கலாம் என்ற கனவில் இருக்கிறாராம் அமைச்சர் மூர்த்தி. இந்த ரோகிணி பொம்மத்தேவன் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உறவினர் என்பது கூடுதல் பலம்.

ஒருவேளை, மூர்த்தியுடனான தொழில் தொடர்பு காரணமாக ரோகிணி பொம்மத்தேவன் பெயர் நிராகரிக்கப்பட்டால், வாசுகி சசிக்குமார் பெயரை அமைச்சர் மூர்த்தி முன்மொழிவார் என்கிறார்கள். வாசுகி யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் திருப்பாலை சசிக்குமார் பசையுள்ள ஆள். ஏற்கெனவே கவுன்சிலராக இருந்தவர். சமூகரீதியாக அமைச்சர் ராஜகண்ணப்பனுடனும் நட்பு பாராட்டுபவர்.

அடுத்து பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜயமவுசி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கோ, தன் மகன் பொன்.சேதுவுக்கோ சீட் தர வேண்டும் என்று கேட்டார் பொன்.முத்து. வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே, எப்படியாவது தன் மருமகளுக்கு மேயர் சீட் வாங்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார் பொன்.முத்து. ஆனால், வேறு யாரை மேயர் வேட்பாளராக அறிவித்தாலும், அதிக எதிர்ப்பு இருக்காது. இவரது மருமகளை அறிவித்தால் மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் என்று அத்தனை பேரும் எதிர்ப்பார்கள் என்பதால், விஷயத்தை எப்படிக் கையாளப் போகிறாரோ தெரியவில்லை.

கோ.தளபதி முதலில் தனது மகள் மேகலாவை மேயராக்க விரும்பினார். ஆனால், எம்எல்ஏவாக, அமைச்சராக இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு கேட்கக் கூடாது என்று கட்சித் தலைமை சொல்லிவிட்டதால், மனிதர் நொந்துபோனார். தன் மகளை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தாமல், உறவினரான இந்திராகாந்தியை வேட்பாளராக்கியிருக்கிறார். ஆனால், இவருக்கு வாய்ப்பு கொடுக்க 2 அமைச்சர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், நிறைய கவுன்சிலர்களும் எதிர்ப்பார்கள் என்பதால், வாய்ப்பு குறைவே.

ரோகிணி (திமுக)
ரோகிணி (திமுக)

மதுரையின் மேயராக பி.மூர்த்தி சொல்லும் ஆளை, அமைச்சர் பி.டி.ஆரின் ஒப்புதலுடன் அறிவிக்கவே பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது. அதில் ஏதேனும் பிரச்சினை என்றால், முழுப் பொறுப்பையும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்துவிடுவார் முதல்வர் என்கிறார்கள். ஏனென்றால், பழனிவேல் தியாகராஜன் குற்றப்பின்னணி கொண்டவர்களைக் கண்டிப்பாகத் தேர்வுசெய்ய மாட்டார் என்பது மேலிடத்து நம்பிக்கை. சாதி பார்க்கவும் வாய்ப்பில்லை. புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் ஆகிவிடும். எனவே, மூர்த்தியை விட்டால் பி.டி.ஆர் சொல்லும் ஆளே மேயராக வாய்ப்பு அதிகம்.

அதுசரி, பி.டி.ஆர் யாரை முன்மொழிவார்? இரண்டு பேர் அவரைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஒருவர் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன். அவரது மனைவி பாண்டிச்செல்வி கவுன்சிலர் தேர்தலில் நிற்கிறார். இன்னொருவர் இவரது தீவிர ஆதரவாளரான பொன்.வசந்த் என்பவரின் மனைவி இந்திராணி. ஆரப்பாளையம் வார்டு 57-ல் போட்டியிடுகிறார் இவர். இந்த இந்திராணியை மேயராக்க பி.டி.ஆரும் விரும்புகிறார் என்கிறார்கள். பிப்ரவரி 9-ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய பி.டி.ஆர், முதல் ஆளாக இவருக்காகப் பிரச்சாரம் செய்ததுடன், இவரது வார்டில் 2 தேர்தல் அலுவலகங்களையும் திறந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரையைப் பொறுத்தவரையில் அமைச்சர் பதவி முக்குலத்தோர் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதால், மேயர் பதவிக்கு பிள்ளைமார், கோனார், நாயுடு போன்ற சமூகங்களுக்கே கொடுக்கப்பட வாய்ப்பு அதிகம். அப்படி மேயர் பதவி மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டால், துணை மேயர் பதவி முக்குலத்தோருக்குத் தரப்படும். எனவே, துணை மேயர் பதவிக்கு முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மல்லுக்கட்டுகிறார்கள். 3 முறை கவுன்சிலராக இருந்த போஸ் முத்தையா, எம்எல்ஏ சீட் கிடைக்காத ஆரப்பாளையம் மா.ஜெயராம், கட்சி நிர்வாகிகள் மூவேந்திரன், முகேஷ் சர்மா என்று அந்தப் பட்டியலும் நீள்கிறது. 99 கவுன்சிலர்கள் அடக்க ஒடுக்கமாகச் சிறப்பாகப் பணியாற்றினாலும், ஒற்றை நபர் ஒட்டுமொத்த கட்சியின் பெயரையும் கெடுத்துவிட வாய்ப்பு அதிகம் என்பதால், துணை மேயர் தேர்வில் கட்சி கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

சண்முகவள்ளி, சண்முகப்ரியா, சுகந்தி (அதிமுக)
சண்முகவள்ளி, சண்முகப்ரியா, சுகந்தி (அதிமுக)

அதிமுக தேர்வு

அதிமுகவைப் பொறுத்தவரையில் மதுரை மாநகராட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோரை நியமித்திருக்கிறது. 3 பேருமே மாவட்டச் செயலாளர்கள் என்றாலும், செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும்தான் வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டினார்கள். முன்னாள் கவுன்சிலர் சண்முகவள்ளிக்கு ராஜூவும், சண்முகப்பிரியா கோசிமினுக்கு செல்லப்பாவும் சீட் வாங்கித் தந்திருக்கிறார்கள். சுகந்தியும் போட்டியில் இருக்கிறார்.

கண்டிப்பாக மேயர் பதவியை எல்லாம் பிடிக்க முடியாது என்று இவர்களுக்குத் தெரியும் என்றாலும், ஏதாவது மண்டலத் தலைவர் பதவியாவது வாங்கிவிட வேண்டும் என்று குறியாக இருக்கிறார்களாம். மொத்தமுள்ள 100 வார்டுகளில் 29 வார்டுகள் செல்லப்பாவின் மாவட்டத்திலும், 71 வார்டுகள் செல்லூர் ராஜூ மாவட்டத்திலும் வருகின்றன. அதிமுக மொத்தமே 20 சீட்தான் பிடிக்கும் என்பது உளவுத் துறை கணிப்பு. அதில் 12 சீட்டாவது நாம் பிடித்துவிட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறாராம் செல்லப்பா.

பாஜகவும் 99 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. மேயர் பதவி பெண்ணுக்கு என்பதால், சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவரும், மாநில மகளிரணி நிர்வாகியுமான மகாலட்சுமி மேயர் கனவில் இருக்கிறார். அவரை அடக்குவதற்காக, இந்த முறை இஸ்லாமியர் ஒருவருக்கு மேயர் பதவி கொடுத்தாலும் கொடுப்போம் என்று கொளுத்திப்போட்டார், பிரச்சாரத்துக்காக மதுரை வந்த அண்ணாமலை. இன்னொரு படி மேலேபோய், இந்த மேடையில் இருக்கிற பாஜக வேட்பாளர்களில் ஒருவர்தான் மேயர், துணை மேயர் என்று சொல்லிவிட்டார். ஒரு சீட் கிடைத்தாலே அதிசயம் என்றாலும் அந்தத் தன்னம்பிக்கை இருக்கிறதே, அதற்குப் பெயர்தான் சார் கடவுள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in