அளவுக்கதிகமான போதையால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா பகவந்த் மான்?

அளவுக்கதிகமான போதையால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டாரா பகவந்த் மான்?

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்ததால் ஜெர்மன் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஆம் ஆத்மி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செப்டம்பர் 11ம் தேதி ஜெர்மனிக்கு சென்றார். இந்த பயணத்தின்போது தொழிலதிபர்கள், பஞ்சாபி மக்கள், முதலீட்டர்களை அவர் சந்தித்தார். மானுடன் அவரின் மனைவி மற்றும் அரசு அதிகாரிகளும் ஜெர்மனிக்கு சென்றிருந்தனர்.

ஜெர்மனி பயணம் முடித்து பிராங்பேர்ட்டில் இருந்து டெல்லிக்கு நேற்று பகவந்த் மான் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் லுஃப்தான்சா விமானத்தில் வரவில்லை. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால் அவர் திரும்புவது தாமதமானதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த சூழலில் பகவந்த் மான் அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்ததால் அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், இதனால் விமானம் நான்கு மணி நேரம் தாமதமானதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

இது தொடர்பாக அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததால் லுஃப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக சக பயணிகளை மேற்கோள் காட்டி குழப்பமான ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே 4 மணி நேரம் விமானம் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை அவர் தவறவிட்டார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை அவமானப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் வகையில், பஞ்சாப் அரசு, முதல்வர் பகவந்த் மான், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இந்த விவகாரத்தில் பஞ்சாபி மற்றும் தேசப் பெருமை சம்பந்தப்பட்டிருப்பதால், இந்திய அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அவர் இறக்கிவிடப்பட்டிருந்தால், இந்திய அரசு ஜெர்மனியிடம் இப்பிரச்சினையை எழுப்ப வேண்டும்" என்று அவர் கூறினார்.

பிராங்பேர்ட்டில் இருந்து வந்த லுஃப்தான்சா விமானத்தில் பயணம் செய்த டெல்லி பயணி ஒருவர், முதல்வர் மான் குடிபோதையில் இருந்ததாக கூறிய செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. அந்த பயணி, " பகவந்த் மான் அதிகப்படியான மதுவை உட்கொண்டதால் அவர் கால்கள் நிலையாக இருக்கவில்லை. அவருடன் வந்த அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் துணையுடனே நின்றார்" என்று தெரிவித்ததை காங்கிரஸ் மேற்கோள் காட்டியிருந்தது.

இதுபற்றி பேசிய ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங், “ திட்டமிட்டபடி செப்டம்பர் 19 ம் தேதி முதல்வர் டெல்லி திரும்பினார். இந்த சமூக ஊடக அறிக்கைகள் அனைத்தும் பொய்ப் பிரச்சாரம். பகவந்த் மான் தனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் சில முதலீடுகளை திறம்படப் பெறுவதால், எதிர்ப்பு கொந்தளிக்கிறது. வேண்டுமானால் நீங்கள் லுஃப்தான்சா ஏர்லைன்ஸிடம் விசாரிக்கவும்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in