கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான கோவின் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவியது. முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் 2-வது அலையின் போது மரபணு மாற்றம் அடைந்த கொரோனா திரிபு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து பொதுமக்களுக்கு செலுத்தியது.
அந்த வகையில் இந்தியாவில், பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனத்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இதேபோல் பாரத் பயோ டெக் நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான கோவின் சான்றிதழை மக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்நிறுவனம் சார்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அந்த விளக்கத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு டிடிஎஸ் எனும் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கோடிக்கணக்கான பேருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில நாட்களில் கோவின் எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சிலர் பதிவிறக்கம் செய்ய முயன்ற போது, அதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், கோவிஷீல்டு சர்ச்சையை ஒட்டி அவரது புகைப்படம் நீக்கப்பட்டு இருக்கிறதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பலரும் தங்களது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அந்தச் சான்றிதழ்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி நடப்பது முதல் முறை அல்ல எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோதும் இதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!
காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா... அதிர வைக்கும் பின்னணி காரணம்!
ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!