`உண்மையான சமூகநீதிக்காவலர் இவர்தான்'- திராவிட கட்சிகளை சாடும் சீமான் யாரைச் சொல்கிறார்?

`உண்மையான சமூகநீதிக்காவலர் இவர்தான்'- திராவிட கட்சிகளை சாடும் சீமான் யாரைச் சொல்கிறார்?

குடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `குடிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து அதற்காக நிதியும் ஒதுக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நாம் தமிழர் கட்சி தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

அறுபது ஆண்டுகாலமாகச் சமூகநீதி மண், பெரியார் மண், சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி, சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டு தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள், உண்மையான இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதற்கான குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து ஏமாற்றி வருகின்றன.

அவ்வாறெல்லாம் வெற்றுக்கூச்சலும், வெளிவேடமும் இடாத பிஹார் மண் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையான சமூகநீதிக்காவலர் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in